சிறப்பு செய்திகள்

தியாகராய சாலையில் ரூ.40.79 கோடியில் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் அக்டோபரில் திறக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி, சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் பாண்டி பஜார், தியாகராய சாலையில் ரூ.40.79 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் வருகின்ற அக்டோபர் மாதம் முதலமைச்சர் ஒப்புதலோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க, தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகள் தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிதல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்தல், பல்வேறு விளம்பரப் பணிகளின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தின் பிற பகுதிகளில் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், பேருந்து தட சாலைகளை மேம்படுத்தும் பணிகள், குளங்கள் பராமரிப்பு பணிகள் போன்ற திட்டப்பணிகள் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் முடிக்க வேண்டும். சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் தியாகராயநகர், பாண்டி பஜார் ,தியாகராய சாலையில் 1522 ச.மீ பரப்பளவில், ரூ.40.79 கோடி மதிப்பில் சுமார் 500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 200 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் முற்றிலும் தானியங்கி முறையில், அமைக்கப்பட்டு வரும் 2 கீழ்தளம், தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முதலமைச்சர் ஒப்புதலோடு வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

ரூ.2.72 கோடி மதிப்பில் 2 எல்.பி.ஜி தகனமேடை மற்றும் நடைபாதையுடன் கூடிய நவீன மயமாக்கப்பட்ட கண்ணம்மாபேட்டை இடுகாட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வரவும், தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு நிதி 2019-20 திட்டத்தின்கீழ் ராஜீவ் காந்தி சாலையில் கஸ்தூரிபாய் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் இரயில் நிலையம் வரை ரூ.20.கோடி மதிப்பில் பங்கிங்ஹாம் கால்வாய் கரையில் சிறுவர் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், மியாவாகி அடர்வன காடுகள், புதிய மரங்கள், நவீன இருக்கைகள், எல்.இ.டி தெருவிளக்குகள், அலங்கார விளக்குகள், சுவர் ஓவியங்கள் மற்றும் கலைநயமிக்க சிலைகள் போன்ற வசதிகளுடன் 2.1 கி.மீ. நீளத்திற்கு நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதை அமைக்கும் பணிகளை உடனடியாக துவங்க வேண்டும்.

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டம், அம்ரூத் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் விடுபட்ட பணிகளுக்கான மதிப்பீட்டிற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான நிலை குறித்தும், பேரூராட்சிகளின் இயக்ககத்தின் சார்பில் அம்ரூத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், தெருவிளக்குகள், அனைவருக்கும் வீடுகள் போன்ற பணிகளின் நிலை குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 80 பேரூராட்சிகளில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.67.62 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 112.54 கி.மீ. நீளமுள்ள 114 பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மூலதன நிதி மானிய திட்டம் மற்றும் இயக்கம், பராமரிப்பு இடைவெளி நிரப்பு திட்டத்தின்கீழ் பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பசுமை வீடு திட்டம் பிரதம மந்திர குடியிருப்பு திட்டம் (ஊரகம்), தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1000 கோடி மதிப்பில் 3500 கி.மீ. நீள ஊரக சாலை மேம்படுத்தும் பணியினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 2500 கி.மீ. நீள சாலைகளை மேம்படுத்தும் பணியையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.