தமிழகம்

திருவள்ளூர் மாவட்டம் செங்காத்தாகுளம் கிராமத்தில் 629 ஏக்கரில் ஒரு புதிய தொழிற் பூங்கா அமைக்க திட்டம் – முதலமைச்சர் தகவல்

சென்னை

திருவள்ளூர் மாவட்டம்,செங்காத்தாகுளம் கிராமத்தில் 629 ஏக்கரில் ஒரு புதிய தொழிற் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பொறுத்தவரை, மத்திய அரசின் சொத்து பிணையில்லா அவசர கால கூடுதல் கடன் திட்டத்தின் கீழ் 9,964 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 229.76 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 127 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூபாய் 18.80 கோடி கடன் ஒப்பளிப்பு செய்யப்பட்டு ரூபாய் 14.24 கோடி கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

2015-ல் முதன்முதலாக உலக முதலீட்டாளர் மாநாட்டை அம்மா அவர்கள் சென்னையில் நடத்தினார். அதில், ரூபாய் 4,031 கோடி முதலீட்டில் 16,225 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 4 தொழிற் திட்டங்கள் தங்களது வணிக உற்பத்தியை இந்த மாவட்டத்தில் தொடங்கியுள்ளன.

இதில் Mahindra Origins, CPCL நிறுவனம் மற்றும் அப்பல்லோ பாலிவினைல் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அடங்கும்.

அம்மாவின் வழியில் வந்த அம்மாவின் அரசும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தியது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூபாய் 620 கோடி முதலீட்டில் 450 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் Yanmar Manufacturing India Private

Limited, Pure Chemicals மற்றும் Mahindra Steel Service ஆகிய நிறுவனங்கள் தங்களது வணிக உற்பத்தியை துவங்கியுள்ளன. ரூபாய் 13,300 கோடி முதலீட்டில் 1,03,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 8 நிறுவனங்கள் தங்கள் தொழில் நிறுவனங்களை நிறுவுவதற்கு பல்வேறு நிலையில் ஆயத்தப் பணிகள் மேற்கொண்டுள்ளன.

உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு பின்னர் ரூபாய் 4,249 கோடி முதலீட்டில் 9,695 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 நிறுவனங்கள் தங்களது தொழிற்திட்டங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளன. இது தவிர, ரூபாய் 124 கோடி முதலீட்டில் 1,352 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 7 நிறுவனங்கள் தங்களது தொழிற்திட்டங்களை துவங்குவதற்கு ஒற்றைசாளார முறையில் விண்ணப்பம் செய்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி வட்டம், மாணலுர் கிராமத்தில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் மின் வாகன உற்பத்திப் பூங்காவும் , 400 ஏக்கர் நிலப்பரப்பில் இதர தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதில் ரூபாய் 4,000 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். ஊத்துக்கோட்டை வட்டம், செங்காத்தாகுளம் கிராமத்தில் சுமார் 629 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு புதிய தொழிற் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொன்னேரி வட்டத்தில் உள்ள வாயலூர் மற்றும் புழுதிவாக்கம் கிராமங்களில் ரூபாய் 216 கோடி முதலீட்டில் பாலிமர் தொழிற் பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதில் 73 தொழிற்மனைகள் சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகள் உடையதாக இருக்கும். இத்திட்டம் 21.2.2020 அன்று தொடங்கப்பட்டு, டிசம்பர் 2020-இல் பணிகள் நிறைவுற்று, செயல்பாட்டிற்கு வரும். இதன் மூலம் 10,000 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு அம்மாவின் அரசால் பல்வேறு துறைகளின் சார்பாக நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு தற்பொழுது நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.