தற்போதைய செய்திகள்

அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு நடத்துநர் மூலம் ரூ.5க்கு முகக்கவசம் வழங்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

அரசு பேருந்துகளில் முக கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு நடத்துநர் மூலம் ரூ.5க்கு முக கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் முன்னிலையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்து துறை வாரியாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கை எடுத்து அனைத்துத்துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பேருந்துகளிலும் கைசுத்தம் செய்யும் திரவம் வைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு நடத்துநர் மூலம் ரூ.5க்கு முகக்கவசம் வழங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றுப்பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் வழங்கப்பட்டு, முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.

இனிவரும் காலங்களில் தொற்றின் தீவிரம் எதிர்பாராத வகையில் அதிகமானால் அதை சமாளிக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும் தற்போதே எடுக்க வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை மட்டுமல்லாது மாவட்டத்தில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். ஆக்ஸிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது படுக்கை வசதிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ள அரசுக் கட்டிடங்கள் எவையெவை இருக்கின்றன என்பது குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கின்றதா என்பதைக் கண்டறியும் வகையில் எடுக்கப்படும் சளி மாதிரி பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்த வேண்டும். தொற்று பாதிப்புள்ள பகுதிகள் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கபசுரக் குடிநீர் வழங்க வேண்டும். கிராமங்கள் தோறும் கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கபசுரக்குடிநீர் தொடர்ந்து வழங்க வேண்டும்.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்றும், பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூகவிலகலை கடைபிடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் அதிகமாகக்கூடும் கடைகள், வணிக நிறுவனங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து சம்மந்தப்பட்ட பகுதிகளில் அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனா தொற்றை ஒழிக்க இயலாது. எனவே, பொதுமக்களும் சுயக்கட்டுப்பாட்டுடன், அரசின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ம.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்தோஷ்குமார், நகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ.சந்தியா, வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் (கரூர்), கணேசன்(குளித்தலை) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.