சிறப்பு செய்திகள்

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

பொதுமக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த, தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது;-

7ம்தேதி முதல் ஒரு சில துறைகளைத் தவிர்த்து, எல்லாவற்றிற்கும் தளர்வுகள் கொடுத்துள்ளோம். தமிழகத்திற்குள் எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு போக்குவரத்து வசதி செய்து கொடுத்துள்ளோம். குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் அனைத்தும், அனைத்துக் கடைகள், வங்கிகள் 100 சதவிகிதப் பணிகளைத் தொடங்கலாம் என்றும் அறிவித்துவிட்டோம். தற்பொழுது தங்குதடையில்லாமல் அனைத்து இடங்களுக்கும் சென்று வரக்கூடிய சூழ்நிலை இருப்பதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இதற்கு முன்பு ஊரடங்கு, இ-பாஸ் முறை இருந்ததால் மக்கள் எங்கே செல்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்தது. தற்பொழுது மக்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வருகிற காரணத்தால், இந்நோய்ப் பரவலை கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருப்பதால் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றி, கவனமாக இருந்து இந்த நோய்ப் பரவல் மேலும் பரவாமல், படிப்படியாக குறையக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மேலும் தொடர்ந்து இருக்க வேண்டும், அங்குள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கத் தவறினால் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவக்கூடிய சூழ்நிலை உள்ளதால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே, சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க, காலியாகவுள்ள இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை நியமித்திருக்கின்றோம். இன்னும், கூடுதலாக நியமிக்க வைத்த கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது.

தற்பொழுது, கொரோனா தொற்று குறித்த ஐயப்பாடு இருக்கின்ற நிலையில், சாதாரண காய்ச்சல் மற்றும் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெறமுடியாத சூழ்நிலை இருக்கிற காரணத்தால் பொதுமக்களுக்கு அன்றாடம் ஏற்படும் நோயை குணப்படுத்த, தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சி, நகராட்சி, பெரிய கிராமங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்கள் அடங்கும். இந்த மினி கிளினிக்கில் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுடன் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் இடம்பெறுவர். காய்ச்சல், தலைவலி போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கு அந்த மினி கிளினிக்கில் மருந்துகள் வழங்கப்படும்.

அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். எனவே, காவல் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறோம். முடிந்தளவு விழிப்புணர்வு ஏற்படுத்தி முகக்கவசம் அணியச் செய்ய வேண்டும். இது மிக, மிக முக்கியம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.