சிறப்பு செய்திகள்

மனிதனுடைய உயிரை காப்பாற்றுவது அரசின் கடமை – முதலமைச்சர் திட்டவட்டம்

சென்னை

தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

இன்னும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தேவைப்படுகிறதென்று சுகாதாரத்துறை செயலாளர் குறிப்பிட்டார். எனவே, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் காலிப்பணியிடங்கள் முழுவதும் நிரப்பப்படும், ஏனென்றால், தமிழகத்தை பொறுத்தவரை ஒரு உயிர் கூட இழப்பதற்கு அரசு அனுமதிக்காது, ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். அதனடிப்படையில் இன்று வரை நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

எவ்வளவு செலவானாலும், எவ்வளவு நிதிச்சுமை ஏற்பட்டாலும் பரவாயில்லை, மனிதனுடைய உயிரைக் காப்பாற்றுவது அரசினுடைய கடமை. அந்த அடிப்படையில் தான், நம்முடைய அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சொல்கின்ற ஆலோசனைகளின்படி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே, பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசாங்கம் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல், கொரோனா நோய் பரவலைத் தடுக்க முடியாது. அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் பின்பற்றினால் தான் இந்த நோய்ப் பரவலைத் தடுக்க முடியும். அதேபோல், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்ய அரசு தயாராக இருக்கின்றது.

இன்றைக்கு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில், இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் கூட, நேற்றையதினம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மருத்துவமனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளித்ததாகவும், ஒரு சுற்றுலா வந்துவிட்டு சென்றதுபோல் இருந்ததே தவிர, நோய்த் தொற்று ஏற்பட்டு வந்துவிட்டு சென்றதுபோல இல்லை என்று ஒரு பெண்மணி சொன்னார்.

அந்த அளவிற்கு நம் அரசு இயந்திரம், அரசு அதிகாரிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு, மக்களுக்கு சேவை செய்வதில் இந்தியாவிலேயே, தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்ற பெருமையை நீங்கள் உருவாக்கித் தந்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் அனைவரும், அருள்கூர்ந்து அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்றுங்கள், நாம் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பலாம். இந்த நோய்ப் பரவலிலிருந்து மக்களை காப்பதற்கு அரசு எடுக்கின்ற முயற்சிக்கு துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.