தற்போதைய செய்திகள்

சசிகலாவை ஏற்க மாட்டோம்-தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம்

சென்னை,

கழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கும் சசிகலாவை ஏற்க மாட்டோம் என்று தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பாநகரில் மாவட்ட கழக அவைத்தலைவர் நுங்கைமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் ஆதிராஜாராம் சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின்னால் கழகத்தை ஒற்றுமையாக வழி நடத்தி பார் போற்றும் நல்லாட்சி நடத்தி பார்ப்போர் வியக்கும் வண்ணம் கழகத்தை வலிமை மிக்க இயக்கமாக வழி நடத்திக் கொண்டிருக்கிற கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் தலைமையில் கழக வளர்ச்சிக்காக அயராது பாடுபடுவோம் என்று தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டம் உறுதி
ஏற்கிறது.

கழகத்தின் காவல் தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்ல எண்ணத்தை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து கோடானுக்கோடி கொள்ளையடித்து வைத்துக் கொண்டிருக்கின்ற மன்னார்குடி கும்பலின் தலைவி சசிகலா பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையானதும் தான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அறிவித்தார்.

இன்று ஒரு சிலரிடம் தொலைபேசியில் உரையாடி அதனை விளம்பரப்படுத்தி கழகத்தில் குழப்பம் ஏற்படுத்தி மீண்டும் கழகத்தை கைப்பற்றி விடலாம் என்கிற நப்பாசையில் பகல் கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.

சசிகலாவை எந்த காலத்திலும் கழகம் ஏற்றுக்கொள்ளாது என்கிற நிலைப்பாட்டை எடுத்திருக்கின்ற கழக தலைமையின் முடிவை தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் வரவேற்கிறது. சசிகலாவோடு தொடர்பு வைத்துக் கொண்டிருப்பவர்களை கழகத்திலிருந்து நீக்க வேண்டும் என்று தென்சென்னை வடக்கு மாவட்ட கழகம் கேட்டுக் கொள்கிறது.

தி.மு.க ஆட்சியின் குளறுபடிகளை திமு.க.வினரின் அத்துமீறல்களளை சுட்டிக்காட்டும் கழகத்தினரை குறிப்பாக கழக தொழில் நுட்ப பிரிவினர் மீது தி.மு.கவினர் வன்முறை தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல் துறையினரை ஏவி பொய் வழக்கு போட்டு வருகின்றனர் எத்தனை வன்முறைகளை ஏவி விட்டாலும், எத்தனை பொய் வழக்குகளை போட்டாலும் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பதை போல கழக செயல் வீரர்கள் வீராங்கனைகள் வீறு கொண்டு எழுந்து தி.மு.க.வினரின் வன்முறைகளையும், கழகத்தினர் மீது அவர்கள் தொடுக்கும் பொய் வழக்குகளையும் எதிர்கொண்டு முறியடிப்போம். மக்கள் நலன் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம் என்று தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.