சிறப்பு செய்திகள்

அடக்குமுறையை கண்டு கழகம் அஞ்சாது-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை

தி.மு.க. அரசின் அடக்குமுறையை கண்டு கழகம் அஞ்சாது என்று எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை இதயதெய்வம் மாளிகையில் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமையில்

கோவை புறநகர் தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

கழக ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டுதலின்படி வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து தமிழகமெங்கும் வருகிற 28-ந்தேதி தேதி கவன ஈர்ப்பு உரிமைக்குரல் முழக்கப் போராட்டம்நடைபெற உள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கோவை மாவட்டத்தின் மீது தி.மு.க. சிறப்பு கவனம் எடுத்து தவறான குற்றச்சாட்டுகளை பரப்பினார்கள். இருந்தாலும் கழக ஆட்சியில் கோவை மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கோவை மாவட்ட மக்கள் கழகத்தை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்துள்ளனர்.

50 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு நாம் கொண்டு வந்துள்ளோம். ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றதும், வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் சேவை செய்வதாக கூறி விட்டு கோவை மாவட்டத்தில் கழக ஆட்சியில் கொண்டு வந்த 96 வளர்ச்சி திட்ட பணிகளை நிறுத்தி விட்டார்.இதனால் குடிநீர் திட்டம், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து என்று கூறினார்கள். ஆனால் தற்பொழுது நிறைவேற்றாமல் உள்ளார்கள். கழகத்தினரை பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள். முதலில் என்வீட்டில் தான் சோதனை செய்வார்கள் என்று எதிர்பார்த்து இருந்தேன். என் மீது என்ன வழக்குகள் வேண்டுமென்றாலும் போடுங்கள். கழக தொண்டர்களின் மீது பொய் வழக்குப் போட்டு பயமுறுத்துவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.

தி.மு.க.வின் அடக்குமுறையை கண்டு நாங்கள் (கழகம்) அஞ்சமாட்டோம். பொய் வழக்குகள் போட்டு எங்களை முடக்கி விடலாம் என்று கனவு காணாதீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் கழகத்தினர் மீது பொய் வழக்கு போட்டு பழி வாங்குவதே வாடிக்கை.

கட்சி ஆரம்பித்ததில் இருந்து வெற்றியை மட்டுமே பார்த்த புரட்சித்தலைவர் உருவாக்கிய கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். கழக தொண்டன் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டான். 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்த தி.மு.க. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

கொரோனா காலத்தில் கழக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு உயிரிழப்பை தடுத்து மக்களை காபாற்றியுள்ளோம். தி.மு.க. ஆட்சியில் கொரோனாவால் ஏற்பட்ட மக்கள் உயிரிழப்பை தடுக்க முடியாமல் தி.மு.க. திணறியது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு சான்றிதழ் கூட வழங்கவில்லை. கோவையில் கழக ஆட்சியில் சிறு வியாபாரிகளுக்காக இலவசமாக விற்பனை கூடம் கட்டிக் கொடுத்தோம். அதைக்கூட பொறுக்க முடியாமல் தி.மு.க. அராஜகம் செய்கிறது.

தி.மு.க. தந்த தேர்தல் வாக்குறுதிகள் எங்கே? 28-ந்தேதி நடைபெறும் போராட்டம் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்கக்கூடிய ஆர்ப்பாட்டமாகவும், அடக்குமுறைகளை கண்டித்தும் நடக்கக்கூடிய போராட்டமாகவும் இருக்கும்.

அனைத்து இடங்களிலும் பதாகைகளுடன் கோசங்கள் எழுப்பி வெற்றிகரமாக போராட்டம் நடத்துவோம். தி.மு.க.வினரின் பொய் வழக்குகளை சமாளிக்க கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட கழக வழக்கறிஞர்கள் தயாராக உள்ளார்கள்.

தி.மு.க.வின் எந்த அடக்குமுறையையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தொண்டர்களை பாதுகாக்கும் ஒரே கட்சி கழகம் தான்.உங்களுக்கு (தொண்டர்களுக்கு) நாங்கள் இருக்கிறோம். திமுகவின் பொய் வழக்குகளை கண்டு பயப்பட வேண்டாம்.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கட்டாயம் அனைத்து இடங்களிலும் வெல்வோம். தி.மு.க.வின் செயல்பாடுகளை இந்த 2 மாதங்களில் மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் தி.மு.க.வுக்கு வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேசினார்.