தற்போதைய செய்திகள்

அம்மாவை பெண்கள் அனைவரும் ரோல்மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை

உலக அளவில் மாபெரும் சக்தி படைத்த தலைவராக திகழ்ந்த அம்மாவை பெண்கள் அனைவரும் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கழக மகளிரணி கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

பெண்கள் நாட்டின் கண்கள். இந்த பூமியை சுமப்பது கூட பூமித்தாய் தான். ஆண் ஆதிக்கம் மிக்க இந்த உலகில் பெண் குலத்தை சார்ந்தவர்கள் பல்வேறு சாதனை படைத்துள்ளனர். அதில் குறிப்பாக தமிழர்களின் குலசாமியாய் திகழும் புரட்சித்தலைவி அம்மாவால் பெண் இனத்திற்கே பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் சக்திமிக்க பெண் தலைவராக அம்மா திகழ்ந்தார். அதனால் தான் அன்னை தெரசா, அமெரிக்க நாட்டிலுள்ள ஹிலாரி கிளின்டன் உள்ளிட்டவர்கள் அம்மாவை நேரடியாக வந்து பாராட்டினர்

பெண் சமுதாயத்திற்காக தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் சுய உதவி குழுக்கள், பெண் காவல் நிலையங்கள், பெண் கமாண்டோ படைகள், விலையில்லா மிக்சி கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள், கிராமப்புற பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் மற்றும் ஆடுகள், பெண் குழந்தை பிறந்தால் வைப்புநிதி, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, இதுபோன்ற திட்டங்களை அம்மா உருவாக்கினார். இதுபோன்ற திட்டங்கள் வேறு எந்த மாநிலத்திலும் ஏன், உலக அளவில் கூட கிடையாது.

அதுமட்டுமல்லாது தமிழர்களின் ஜீவாதார பிரச்சனையான முல்லை பெரியார், காவேரி போன்றவற்றின் உரிமைக்காக மாபெரும் சட்டப்போராட்டம் நடத்தி விவசாயிகள் வாழ்வை குளிரச் செய்தார். மேலும் புரட்சித்தலைவருக்கு பின்னால் இந்த புனித இயக்கத்தை கண் இமை போல் காத்து தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவரின் புனித ஆட்சியை மலரச் செய்தார். புரட்சித்தலைவர் இருக்கும்போது இந்த இயக்கத்தில் 17 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அம்மா அவர்கள் ஒன்றரைக்கோடி தொண்டர்களை உருவாக்கி யாராலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக இந்த இயக்கத்தை உருவாக்கினார்.

ஆகவே பெண்களாகிய நீங்கள் அம்மாவை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களால் எதையும் சாதிக்க முடியும். அதுமட்டுமல்லாது இன்றைக்கு நமது முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அம்மாவின் பாத தட வழியில் அடி பிறழாமல் கழகத்தையும் , ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகின்றனர். அம்மா எப்படி பெண்களுக்கு திட்டங்களை தந்தாரோ அந்தத் திட்டங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள தாலிக்கு தங்கம் திட்டத்தில் 8 கிராம் தங்கமாக உயர்த்தப்படும், கர்ப்பிணி பெண்களுக்கு 18,000 உதவி தொகை உயர்த்தப்படும், உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள்வ ழங்கப்படும் என்று அறிவித்தார். இது அனைத்தையும் அம்மாவின் தூய தொண்டர்களான முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பெண்களுக்கு வழங்கி வருவதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். மேலும் இந்த நான்கு ஆண்டுகளில் மகளிருக்கு எண்ணற்ற திட்டங்களை செய்து பெண்குலத்தை காக்கும் நல்லரசாக அம்மா அரசு திகழ்கிறது

குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மா அறிவித்தார். அதனை நடைமுறைப்படுத்தி முதலமைச்சர் செயல்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்தார். ஆகவே இந்த நான்காண்டுகளில் பெண் சமுதாயத்திற்கு திட்டங்களை கிள்ளி கொடுத்தால் போதாது என்று அள்ளி அள்ளி கொடுத்து வரும் அம்மா அரசின் சாதனைத்திட்டங்களை ஒவ்வொரு வீடு வீடாக சென்று பெண்களிடம் எடுத்துக் கூறுங்கள். வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் கழக இமாலய வெற்றிக்கு பெண்கள் பங்களிப்பு அதிகமாக இருந்தது என்ற வரலாற்றை உருவாக்கி அம்மாவிற்கு அழியாப் புகழைப்பெற்றுத் தாருங்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக நிர்வாகிகள் ஐயப்பன், திருப்பதி, பஞ்சம்மாள், பஞ்சவர்ணம், ஒன்றிய கழக செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், ரவிச்சந்திரன், ராஜா, பிச்சைராஜன், பேரூர் கழக செயலாளர்கள் பாப்புரெட்டி, கொரியர் கணேசன், நெடுமாறன், பாலசுப்ரமணி, குமார், அழகுராஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், வக்கீல் தமிழ்ச்செல்வன், பால்பாண்டி, காசிமாயன், லட்சுமி, சிங்கராஜ பாண்டியன், சரவணன், ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.