கன்னியாகுமரி

ரூ.80 லட்சம் மதிப்பில் புதிய திருமண மண்டபம் – என்.தளவாய் சுந்தரம் அடிக்கல் நாட்டினார்

கன்னியாகுமரி:-

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பேரூராட்சி பகுதியில், மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், ரூ.80 லட்சம் செலவில், புதிய திருமண மண்டபம் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் அடிக்கல் நாட்டினார்.

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பேரூராட்சிக்குட்பட்ட, மார்த்தாண்டபுரத்தில், மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக, ரூ.80 லட்சம் செலவில், புதிதாக திருமண மண்டபம் கட்டப்படவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தலைவர் டாக்டர்.சுப்பிரமணியம் தலைமையில், மயிலாடி கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு புதிதாக கட்டப்படவுள்ள திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின்போது, 110-விதியின் கீழ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக, ஏழை, எளிய பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகையில், திருமண மண்டபங்கள் கட்டித்தரப்படும் என அறிவித்தார்கள். அதனடிப்படையில், நமது மாவட்டத்திற்கு, மயிலாடி மற்றும் வெள்ளமடம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு இரண்டு திருமண மண்டபங்கள் கட்டுவதற்காக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும், திருமண மண்டபங்கள் கட்டும் பணி ஆறு மாதங்களுக்குள் முடிவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இப்பகுதி மக்கள் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களை குறைந்த வாடகையில், இம்மண்டபத்தில் நடத்த முடியும். மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கத்தலைவர் டாக்டர்.ஆர்.சுப்பிரமணியத்திற்கு நேர்மையான நிர்வாகத்திற்கும், வளர்ச்சிக்கும் கிடைத்த பரிசுதான் இத்திருமண மண்டபம்.

மேலும், இப்பகுதியில் ஒருசில வாரங்களில், புதிதாக பால்பண்ணை அமைப்பதற்கு, அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மயிலாடி பகுதி மட்டுமல்லாது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளை சார்ந்த பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, நான் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

மேலும், 2020-2021-ம் நிதியாண்டிற்கு வணிக வளாகம் கட்டுதல் உள்பட பல்வேறு திட்டங்களை நமது மாவட்டத்திற்கு, கூட்டுறவு துறையின் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. மயிலாடி தொடக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமானது 62 ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு தடைகளை கடந்து, இந்த சங்கத்தின் வாயிலாக ரூ.12 லட்சம் லாபம் ஈட்டியிருக்கிறது. இதன் வாயிலாக பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு கடனுதவிகளை இச்சங்கம் வழங்கி வருவது, பாராட்டுக்குரியது.

இச்சங்கத்தின் மூலம், தொழில்வகை கடன்களாக 203 நபர்களுக்கு மொத்தம் ரூ.150.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில், வட்டியில்லாத கடன்களாக, 24 நபர்களுக்கு விவசாய கடனாக ரூ.49.60 லட்சமும், மகளிர் கூட்டு பொறுப்பு குழு கடனாக 21 நபர்களுக்கு ரூ.21 லட்சமும், மத்திய கால கடனாக 40 நபர்களுக்கு ரூ.39.50 லட்சமும், சுய உதவி குழு கடனாக 11 நபர்களுக்கு ரூ.87 லட்சமும், வைப்பு கடனாக 4 நபர்களுக்கு ரூ.1.80 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ‘கூட்டுறவே, நாட்டுறவு” என்பதற்கிணங்க, நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இப்பகுதி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

முன்னதாக வரவேற்று பேசிய, மயிலாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் நாகராஜன், இவ்வங்கிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நிதியை பெற்று தந்தமைக்காகவும், மயிலாடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளின் வளர்ச்சிக்காக, பல்வேறு அடிப்படை வசதிகளை தொடர்ந்து 20 வருடங்களாக செய்து வரும், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரத்துக்கு, நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (நாகர்கோவில் சரகம்) பா.சங்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க நிர்வாக உறுப்பினர் ஏ.வேதமணி நன்றி கூறினார். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் எஸ்.அழகேசன், சங்க செயலாளர் தங்கபாய், மயிலாடி பால்பண்ணைத் தலைவர் பெருமாள் (எ) சீனி, ஏ.ஜெசீம், மயிலாடி எம்.மனோகரன், தாமரைதினேஷ், மணிகண்டன், மகாராஜன், வி.ரேவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.