தற்போதைய செய்திகள்

வரும் 21 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

21-ம்தேதி முதல் ஐந்து நாட்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு்ள்ளது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட நாதிபாளையம், வெள்ளாங்கோயில், மொடச்சூர் ஆகிய பகுதிகளில் மேல்நிலை தொட்டி அமைத்தல், கான்கிரீட் சாலைகள் அமைத்தல், கூட்டுறவு வங்கி கட்டிடம் மற்றும் கறவை மாடு கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை 1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளா்கள் சந்திப்பில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 21-ம்தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு்ள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் இதனை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு குறைந்த பின்னா் தான் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். பகுதி நேர நூலகங்கள் முழுநேர நூலகங்களாக மாற்றம் செய்ய துறை ரீதியாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

இந்நிகழ்ச்சியில் கோபி ஒன்றியக் கழக செயலாளர் சிறுவலூர் எம்.மனோகரன், ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், யூனியன் சேர்மன் கே.பி.மெளதீஸ்வரன், ஊராட்சி தலைவர் ஆப்பிள் தன்னாசி, ஞானசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.