தற்போதைய செய்திகள்

விபத்தில் படுகாயமடைந்த கழக பிரமுகர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

விருதுநகர்

சிவகாசி அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த சிவகாசி தொகுதி பள்ளபட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த கழக பிரமுகர் குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவிக்கு தனது சொந்த நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

சிவகாசி அருகே பள்ளபட்டி பஞ்சாயத்து முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் கழக பிரமுகர் முருகன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 21 ). இவரும் இவரது மனைவி முத்துமணி (வயது20) இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி சாலையில் வந்து கொண்டிருந்த போது ஈஞ்சார் விலக்கு அருகே கார் மோதியதில் விபத்துக்குள்ளாகி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

கார்த்திகேயன் கால் முறிவு ஏற்பட்டு எழுந்து நடக்கவே ஒரு வருடம் ஆகும் என்று டாக்டர்கள் கூறி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாழ்வாதாரம் கேள்விக்குறியான சூழ்நிலையும் மருத்துவச் செலவிற்கும் கஷ்டப்பட்டனர். இதனைக் கேள்விப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கார்த்திகேயன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து கணவன், மனைவி இருவருக்கும் மருத்துவ செலவிற்கு ரூபாய் 2 லட்சத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார். கார்த்திகேயன் மனைவி முத்துமணிக்கு அரசு வேலை வாய்ப்பிற்கு பரிந்துரை செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அப்போது சிவகாசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், பள்ளபட்டி ஊராட்சி மன்ற தலைவர் உசிலை செல்வம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, மதுரை ஏர்போர்ட் அத்தாரிட்டி கமிட்டி உறுப்பினர் எஸ்.எஸ்.கதிரவன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் விஜய்ஆனந்த், மாவட்ட சிறுபான்மையினர் அணி செயலாளர் சையதுசுல்தான்இப்ராகிம், நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், நகர இளைஞரணி செயலாளர் கே.டி.ஆர் கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்