சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் – துணை முதலமைச்சர் வழங்கினார்

தேனி

தேனி மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் நேற்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவிபல்தேவ் தலைமையில், சிறப்பாக பணிபுரிந்த நல்லாசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

கல்வியறிவு பெற்ற சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு ஆசிரியராய் பணியை தொடங்கி, தனது அயராத உழைப்பால் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ்.இராதா கிருஷ்ணனை சிறப்பிக்கும் வகையில், அன்னாரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆண்டுதோறும் “ஆசிரியர் தினமாக” தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்ற கொன்றை வேந்தன் பாடலில் ஒளவையார், உடலுக்கு கண்கள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோன்று ஒருவனது வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போன்றது என்று கல்வியின் சிறப்பினை போற்றுகிறார். அத்தகைய சிறப்புமிக்க கல்விச் செல்வத்தை மாணாக்கர்களுக்கு போதிக்கும் ஆசிரியப் பெருமக்கள் “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்று தெய்வநிலைக்கு ஒப்பாக போற்றப்படுகிறார்கள்.

மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி. அது சமூக நீதியையும், சுமூகமான மனித உறவுகளையும் வளர்க்கும் கலையாகும். ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டுமல்லாமல் அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவும் தன்மையுடையது என்பார் வள்ளுவர். அத்தகைய கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர் பெருமைக்குரியவர். எதிர்கால இருளை நீக்குகின்ற வெளிச்சமாக மாணவர் மத்தியில் ஆசிரியர்கள் விளங்க வேண்டும். “மாதா, பிதா, குரு, தெய்வம்” தாய் தந்தைக்கு அடுத்த இடத்தில் அதனால்தான் ஆசிரியர்களை முன்னோர்கள் வைத்துள்ளனர்.

அறப்பணியான ஆசிரியப் பணியினை அர்ப்பணிப்பு உணர்வோடு ஆற்றிவரும் நல்லாசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” வழங்கி சிறப்பித்து வருகிறது. சிறந்த முறையில் கணினியை பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்றுவித்தல், கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்குதல், குழந்தைகள் சேர்க்கை மற்றும் பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு “கனவு ஆசிரியர்” போன்ற சிறப்புமிக்க விருதுகளை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி ஆசிரியப் பெருமக்களை கௌரவித்து வருகிறது. அதனடிப்படையில், இந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் 8 சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டினார்.

இதேபோல் இனி வரும் காலங்களில் இன்னும் அதிக அளவில் ஆசிரியர்கள் இந்த பெருமைக்குரிய விருதினை பெறவேண்டும் எனவும், ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களை சமுதாயத்தில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கும், அவர்களுக்கு நல்ல முறையில் கல்வி கற்பித்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

முன்னதாக, துணை முதலமைச்சர் மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.

இந்நிகழ்வுகளின் போது, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.திலகவதி, பெரியகுளம் சார் ஆட்சியர் செல்வி டி.சிநேகா, மாவட்ட ஊராட்சித்தலைவர் க.ப்ரிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.பாலதண்டயுதபாணி, செயற்பொறியாளர் எஸ்.கவிதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.