தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் நகராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகள் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் ஆய்வு

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் பி.நாயர் உடனிருந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகராட்சியில், வேதாரண்யம் – நாகப்பட்டினம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு, கடந்த 27.08.2020 அன்று முதலமைச்சரால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தினையும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேதாமிர்த ஏரியில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரது தொகுதி மேம்பாட்டுத் நிதியின் மூலம் தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ள ஏரி வடகரை மற்றும் தென்கரை தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து, வேதாரண்யம் நகராட்சிக்குச் சொந்தமான காந்தி பூங்காவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமான யோகா தியான மையத்தினை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வேதாரண்யம் நகராட்சிப் பகுதியில், மூலதன மானிய நிதி 2017-18 ன் கீழ் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 27.08.2020 அன்று முதலமைச்சரால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சாவிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பயனாளிகளிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது-

“ வேதாரண்யம் நகராட்சியில் சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வேதாமிர்த ஏரியானது, இப்பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு மிகப்பெரிய பேருதவியாக இருக்கக்கூடிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகும். இந்த குளத்தைச் சுற்றி தடுப்புச்சுவர்கள் இல்லாமலும், படித்துறைகள் பழுதடைந்தும் காணப்பட்டது.

இந்நிலையில் இப்பகுதி மக்களுக்கு ஆண்டு முழுவதும் பயன் தரும் இக்குளத்தை மேம்பாடு செய்திட வேண்டும், தண்ணீரை நன்னீராக பாதுகாக்க வேண்டும், நீராதாரத்தினை மேம்படுத்திட வேண்டும் என்ற உயரிய லட்சியத்தோடு, இக்குளத்தின் நான்கு கரைகளிலும் தடுப்புச்சுவர்கள் அமைத்து, பொதுமக்களின் தேவைக்கேற்ப படித்துறைகள் அமைத்து, இப்பகுதி வாசிகள் காலை, மாலை நடைப்பயிற்சி மேற்கொள்கும் வகையில் நான்கு புறமும் நடைபாதை அமைத்திட புரட்சித்தலைவி அம்மாவின் அரசுக்கும், முதலமைச்சருக்கும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தோம். நமது கோரிக்கையினை ஏற்று, இக்குளத்தின் மிக நீளமான கிழக்கு, மேற்கு கரைகளின் தடுப்புச்சுவர், 2 கி.மீ நிளமுள்ள நடைபாதை, மின் விளக்குகள் அமைத்திட ரூ.6.50 கோடி நிதியினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தள்ளது.

மேலும், இந்த ஏரியின் நீரை இறைத்து, தூர் வாரிடும் பணியினை மேற்கொள்ள மின்மோட்டார் உட்பட தேவையான நிதியினை நன்கொடையாக அளிப்பதாக வேதாரண்யம் பகுதியில் அமைந்துள்ள கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. அந்நிறுவனத்தாருக்கு தமிழக அரசின் சார்பிவும், இப்பகுதி மக்களின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்று புகழ் வாய்ந்த 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேதாமிர்த ஏரியின் புனரமைப்பு பணிக்காக ரூ.6.50 கோடி நிதி வழங்கிய தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஆர்.கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வி.சுப்பையன், நகராட்சி ஆணையர் (பொ) பிரதான் பாபு, வட்டாட்சியர் முருகு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.