தற்போதைய செய்திகள்

புரட்சித்தலைவி அம்மாவுக்கு மதுரை திருமங்கலத்தில் கோயில் பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு

மதுரை

கழக அம்மா பேரவையின் சார்பில் திருமங்கலம் அருகே புரட்சித்தலைவி அம்மாவிற்கு திருக்கோயில் கட்டும் பணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூர் அருகே கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கழக அம்மா பேரவை சார்பில்
புரட்சித்தலைவி அம்மாவிற்கு கோயில் கட்டி வருகிறார்.

இந்த பணியினை ஆய்வு செய்தார் அவருடன் அவரது தந்தையார் ஆர்.போஸ் அவரது தாயார் பி.மீனாள் மற்றும் கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, கழக அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராமகிருஷ்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் அன்னபூர்ணா தங்கராஜ் உட்பட பலர் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

உலகமெங்கும் வாழும் 10 கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருகிறார் புரட்சித்தலைவி அம்மா.
மக்கள் நலனே தன் நலன் என்று மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து ஒரு தியாக தீபமாக வாழ்ந்து ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களின் குலதெய்வமாக அம்மா திகழ்ந்து வருகிறார்.

இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகாலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று அம்மா அவர்கள் இலட்சிய முழக்கமிட்டார் அந்த லட்சிய முழக்கங்களை இன்றைக்கு நமது முதல்வரும், துணை முதல்வரும் அம்மாவின் பாத தடத்தில் அடிபிறழாமல் நிறைவேற்றுகின்றனர். இந்த இயக்கம் நிச்சயம் இன்னும் நூறு ஆண்டுகாலம் மக்கள் பணியாற்றும் ஏனென்றால் அம்மாவின் வாக்கு தெய்வ வாக்கு நிச்சயம் பழிக்கும்.

புரட்சித்தலைவி அம்மா முக்காலம் உணர்ந்த தீர்க்கதரிசி அதனால்தான் இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ் இனமே வணங்கும் தமிழர் குலசாமியாக அம்மா திகழ்கிறார்கள். தொடர்ந்து இன்றைக்கு எங்களது குடும்பத்தாரும் குல தெய்வமாக அம்மாவை வழிபட்டு வருகிறோம் அந்த தெய்வத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரின் நல்லாசியுடன் தற்போது கழக அம்மா பேரவை சார்பில் கோயில் கட்டி வருகிறோம்.

இந்த அம்மா திருக்கோயிலில் அம்மாவின் திருஉருவ வெண்கலச் சிலையும், அதேபோல் புரட்சித்தலைவருக்கு முழு நீள வெண்கலச் சிலையும் அமைக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாது இந்த திருக்கோவிலில் அனைத்து மக்களும் வழிபடும் வண்ணம் அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த பணி விரைவில் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.