தமிழகம்

பேரவை கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு கொரோனா நோயின்மை சான்றிதழ் கட்டாயம் – பேரவை செயலாளர் அறிவிப்பு

சென்னை

பேரவை கூட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு கொரோனா நோயின்மை சான்றிதழ் கட்டாயம் என்று பேரவை செயலாளர் கி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேரவை செயலாளர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள ஆணைகளின்படி 14.9.2020 அன்று கலைவாணர் அரங்கில் தொடங்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் சமூக இடைவெளிவிட்டு இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்,தலைமைச் செயலாளர்,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர்,சென்னை,காவல் துறை ஆணையாளர்,பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகளோடு,பேரவை தலைவர் கலந்தாலோசித்ததன் அடிப்படையில்,கொரோனா நோய் தொற்றைத் தடுப்பதற்காக,பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்குள்ளாக கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

11.9.2020 நாள் முதல் ஒவ்வொரு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம்,அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பேரவைக் கூட்ட அரங்கில் பணிபுரிய வேண்டிய சட்டமன்ற ஊழியர்கள்,பேரவை பாதுகாவலர்கள்,கூட்ட அரங்கிற்கு வரும் அனைத்துத் துறை அதிகாரிகள்,பத்திரிகையாளர்கள்,அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கொரோனா நோயின்மை சான்றிதழ் உடன் வைத்திருக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்திலும்,ஏனையோருக்கு பேரவைச் செயலக வளாகத்திலும்,கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.உறுப்பினர்கள் தவிர,இச்செயலகத்தால் பிரத்யேகமாக வழங்கப்பட்ட அனுமதிச்சீட்டு வைத்திருப்போர் மட்டுமே பேரவைக் கூட்டம் நடைபெறும் மூன்றாவது தளத்தில் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு பேரவை செயலாளர் கி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.