சிறப்பு செய்திகள்

கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை – முதலமைச்சர் உறுதி

சென்னை

கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்டவளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி – கிசான் திட்டத்தில் முறைகேடு குறித்து…

பதில் – கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை கண்டுபிடித்ததே அம்மாவின் அரசு தான். அதனை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு வழங்கி, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 13 மாவட்டங்களில் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. நான்கு மாத காலங்களில் தான் இது நடந்திருக்கிறது. ஏற்கனவே 41 லட்சம் விவசாயிகள் தான் இடம் பெற்றிருந்தார்கள்.

4 மாத காலத்தில் 46 லட்சமாக உயர்ந்துவிட்டது. அதனால் சந்தேகம் ஏற்பட்டது. எப்படி இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு பேர் இந்த திட்டத்தின் வாயிலாக உதவி பெற முடியும் என்று துறைக்கு சந்தேகம் ஏற்பட்ட காரணத்தினாலே இத்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததன் அடிப்படையில் தான் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதனால் தான் இன்றைக்கு எந்தந்த இடத்திலே முறைகேடுகள் நடந்ததோ, அங்கே எல்லாம் ஆய்வு செய்து முறைகேட்டை கண்டுபிடித்து அந்தப்பணம் திருப்பி பெறப்பட்டு வருகிறது. நேற்று கூட வேளாண்மைத் துறை செயலாளர் தெளிவாக விளக்கமாக இதுகுறித்து தெரிவித்திருக்கின்றார்.

எங்கெங்கெல்லாம் முறைகேடு நடைபெற்று இருக்கிறதோ, அங்கே எல்லாம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குகள் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 18 நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 81 ஒப்பந்த ஊழியர்கள்பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 34 அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யார் யாரெல்லாம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.