சிறப்பு செய்திகள்

நதிநீர் பிரச்சினையில் தமிழக உரிமையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் முதலமைச்சர் திட்டவட்டம்

சென்னை

நதிநீர் பிரச்சினையில் தமிழக உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி – கொரோனா காலத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்து, தொடர்ந்து வழங்காமல் இருப்பது குறித்து.

பதில் – ஒரு மாதத்தொகை வழங்கப்படும் என்று தான் சொன்னோம். ஒவ்வொருமாதமும் இல்லை. அதை அரசு வழங்கி வருகிறது.

கேள்வி – அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியது குறித்து AICTE அண்ணாபல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக சொல்கிறார்களே.

பதில் – ஏற்கனவே இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தெளிவாக ஊடங்களிலும் பத்திரிகைகளிலும் குறிப்பிட்டிருக்கிறார். அது தான் உண்மை.

கேள்வி – திருவண்ணாமலை நகராட்சியாகவே இருக்கிறது, அது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா.

பதில் – திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான நிலை இன்னும்வரவில்லை. அப்படி ஒரு காலக்கட்டம் வரும் போது அதுகுறித்து அரசால் பரிசீலிக்கப்படும்.

கேள்வி – திருவண்ணாமலைக்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து..

பதில் – நான் அதுகுறித்து ஏற்கனவே தெரிவித்து விட்டேன். 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பேசும் போது மக்கள் விருப்பம் தெரிவித்த இடத்திலே கட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். ஒரு இடத்தை குறிப்பிட்டு சொல்லிஇருக்கிறார்கள், அது அரசினுடைய பரிசீலனையில் இருக்கிறது.

கேள்வி – தென்பெண்ணை ஆற்றை நம்பி தான் ஆறு மாவட்ட விவசாயிகள் இருக்கிறார்கள். தென்பெண்ணை ஆற்றில் நீர் கலங்கலாக தான் வருகிறது. இந்த ஆறு நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடக அரசு கோலாருக்கு ராட்சசபைப் போட்டு தண்ணீர் கொண்டு செல்கிறார்கள். இதனால் இந்த ஆறு மாவட்டவிவசாயிகளுக்கும் தென்பெண்ணை ஆற்றில் இனிவரும் காலங்களில் தண்ணீர்வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதற்கு அரசு என்ன செய்யப் போகிறது.

பதில் – ஏற்கனவே இந்த மாநிலத்திலே இருக்கின்ற நதிநீர் பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றமே தெளிவுப்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அண்டை மாநிலத்திலிருந்து உற்பத்தியாகி வருகின்ற நீரை தடுக்க கூடாது என்று தெரிவித்திருக்கிறது. அப்படி தடுக்கின்ற பட்சத்தில், தண்ணீரை திருப்பி விடுகின்ற பட்சத்தில், வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றன. நம்முடைய உரிமையை எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். உரிமையை நிலைநாட்டுவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி அளித்தார்.