தற்போதைய செய்திகள்

எதற்கெடுத்தாலும் கழக அரசை குற்றம் சொல்லும் ஸ்டாலினை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேச்சு

சென்னை

எதற்கெடுத்தாலும் கழக அரசை குற்றம் சொல்லும் ஸ்டாலினை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வடசென்னை தெற்கு மாவட்டம் ராயபுரம் தொகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் மற்றும் ஆலோசனை கூட்டம் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா முன்னிலையில், ராயபுரம் கிழக்கு பகுதி கழக செயலாளர் எ.டி.அரசு தலைமையில் ராயபுரத்தில் நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி கழகத்தின் சார்பாக தொண்டர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போன மீனவர்களை பற்றி தேடும் பணிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பல இடங்களில் காணாமல் போனவர்கள் பல தீவுகளில் ஒதுங்கி மீண்டும் திரும்பி வந்திருக்கிறார்கள். அதேபோன்று இந்த மீனவர்களும் கண்டிப்பாக திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்றார்.

பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு இந்த தொகுதியின் வெற்றிக்கு அச்சாரமாக இளைஞர்கள் திரண்டு இருப்பது அத்தாட்சியாக உள்ளது. மேலும் காணாமல் போன மீனவர் நலவாரியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு முதலமைச்சரிடம் கூறி உதவிகள் செய்யப்படும். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் உள்ளவர்கள் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கழகத்திற்கு பணி செய்வதை தன் கடமையாக ஆக்கி கொள்ள வேண்டும். உழைத்தால் பதவி தேடி வரும்.

எதற்கெடுத்தாலும் கழக அரசை குற்றம் சொல்லும் ஸ்டாலினை மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். மறைந்த பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோர் வழியில் நடத்தப்படும் இந்த அரசு மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அதிமுக இரும்பு கோட்டை அதை யாராலும் அழித்திட முடியாது. நானும் பலமுறை எம்.எல்.ஏ வாக நிற்க முயற்சித்து செய்து கடைசியில் எம்.எல்.ஏ சீட் கிடைத்தது. என்னுடைய பணியாலும், கழகத்திற்கு ஆற்றிய தொண்டாலும் உயர்வு பெற்றேன். அதை போல நீங்களும் கழகத்திற்கு தங்களை அர்ப்பணித்து கொண்டு செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் கு.சீனிவாசன், புரசை எம்.கிருஷ்ணன், ஆர்.எம்.டி.ரவிந்திரஜெயின், புண்ணியகோட்டி, எஸ்.எஸ்.கே.கோபால், முருகன், வட்ட செயலாளர்கள் வாசு, உதயன், லோகு, ஜெயக்குமார், தணிக்காச்சலம், ஆ.மணி, ஜெசுபால், சுகுமார், மற்றும் பா.சங்கர், வழக்கறிஞர் விஜயகுமாரி, விசு, சாகுல், தனசேகர், ஆர்.சண்முகம், மற்றும் இளைஞர் பாசறை, இளம்பெண் பாசறை, பகுதி கழக நிர்வாகிகள், மகளிர் அணி சேர்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இராயபுரம் மேற்கு பகுதி கழக செயலாளர் வி.எம்.மகேஷ் நன்றி கூறினார்.