தமிழகம்

இயற்கை நமக்கு சாதகமாக இருந்ததால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது – முதலமைச்சர் தகவல்

சென்னை

அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் இயற்கை நமக்கு சாதகமாக இருந்ததால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல தடுப்பணைகளை கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள ஷட்டரை சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக, பொதுப்பணித் துறையின் சார்பாகவும், ஊராட்சி ஒன்றியங்களின் சார்பாகவும், பல ஏரிகள் தூர் வாரப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், மழைக் காலங்களில் பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டு, நிலத்தடி நீர் உயர்ந்து, வேளாண் பெருமக்களுக்கும், குடிப்பதற்கும் தேவையான நீர் கிடைக்கும். குடிமராமத்துத் திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளின் பங்களிப்போடு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே, விவசாயிகள் கண்ணுங்கருத்துமாக இருந்து இப்பணிகளை மேற்கொள்கின்ற போது, அந்தப் பணிகள் தூய்மையாகவும், நேர்மையாகவும் இருக்கும். இத்திட்டத்தினால், ஏரிகள் ஆழமாவதுடன், ஏரிகளிலிருந்து அள்ளப்படுகின்ற வண்டல் மண் விவசாயிகளின் நிலத்திற்கு இயற்கை உரமாகப் பயன்படுகிறது. இதன்மூலம் விளைச்சல் அதிகமாகிறது. அங்கு உற்பத்தியாகும் உணவுப் பொருட்கள் உடலுக்கு நலம் பயக்கும். இதுபோன்ற அரசின் நல்ல திட்டங்களினால், வேளாண் பெருமக்கள், இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக நெல் விளைச்சலை பெற்றிருக்கிறார்கள்.

வேளாண் மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளின் மூலமாக பயிர்க்கடன் வழங்கிய காரணத்தினால், அதிக நிலப்பரப்பில் வேளாண் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். சுமார் 6 லட்சம் ஏக்கருக்கு மேலாக கூடுதல் பரப்பில் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இயற்கை நமக்கு சாதகமாக இருந்த காரணங்களால், வேளாண் பெருமக்களுக்கு கூடுதலான வருமானமும் கிடைத்திருக்கிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.