கன்னியாகுமரி

மணல் திட்டுகளை அகற்றும் பணி விரைவில் துவங்கும் – டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தகவல்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் மணல் திட்டுகளை அகற்றும் பணி ஒரு சில தினங்களில் துவங்கும் என தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப்பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் துறைமுகத்தில் மண் தூர்வாரும் இயந்திரத்தினை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் பகுதி மீனவ மக்களின் நலன் கருதி, துறைமுகத்தின் முகத்துவாரத்திலுள்ள மணல் திட்டினை அகற்றுதற்கு ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மணல் திட்டினை உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளார்கள். அப்பகுதியில், மணல் திட்டினை இயந்திரத்தின் வாயிலாக அகற்றுவதற்கு, ரூ.2 கோடி மதிப்பிலான, 850 குதிரைதிறன் கொண்ட மண் தூர்வாரும் இயந்திரம் கொண்டு வரப்பட்டு, அலையின் காரணமாக, தற்போது, முட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரமானது நாகப்பட்டிணம் மாவட்டத்திலிருந்து, கடல் வழியாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 200 கன மீட்டர் அளவும், நாளொன்றுக்கு 2000 கன மீட்டர் முதல் 3000 கன மீட்டர் வரை அளவுள்ள மணலை அகற்ற முடியும். இதற்காக, ஒரு கன மீட்டர் மணல் அகற்றுவதற்கு ரூ.210 வாடகையாக செலுத்தப்படுகிறது. தற்போது கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால், தேங்காய் பட்டணம் துறைமுகத்திற்கு, கொண்டு செல்ல இயலாத நிலையில் உள்ளது.

கடல் சீற்றம் ஒரு சில தினங்களில் குறைந்தவுடன் தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு, மண் தூர்வாரும் இயந்திரத்தை கடல் மார்க்கமாக கொண்டு சென்று, அப்பணிகள் துவங்கப்படும். தற்போது, இயந்திரத்திற்கும், மணல் திட்டிற்கும் இடையேயான குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, தேங்காய்பட்டணம் பகுதி மீனவ மக்களின் நலன்கருதி, துறைமுக முகத்துவாரத்தில், மண் அகற்றும் பணி விரைவில் துவங்கப்படும்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் டி.ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர் எம்.சேவியர் மனோகரன், மாவட்ட மீன்வள கூட்டுறவு இணையப்பெருந்தலைவர் அ.திமிர்த்தியூஸ், தேங்காய்பட்டணம் துறைமுக செயற்பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.