சிறப்பு செய்திகள்

நீட் தேர்வு இருக்கக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் – முதலமைச்சர் பேட்டி

சென்னை

நீட்தேர்வு இருக்கக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:விழுப்புரத்திற்கு அரசு சட்ட பல்கலைக்கழகம் கொண்டு வரப்படுமா?

பதில்: ஏற்கனவே பல பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் அரசு இதைப்பற்றி பரிசீலிக்கும்.

கேள்வி: விழுப்புரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?

பதில்: அந்தத் தகுதி வருகின்றபொழுது, அரசு பரிசீலிக்கும். மாநகராட்சியாக்குவற்கு சில வரைமுறைகள் இருக்கின்றன, அந்த வரைமுறைகளை எட்டினால் அதை அரசு பரிசீலிக்கும்.

கேள்வி: தமிழ்நாடு சீருடைப்பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் 2019ம் ஆண்டில் 8,538 நபர்களை தேர்வு செய்துள்ளனர், மீதி 11,000 நபர்கள் எல்லாத் தகுதியும் பெற்று காத்திருக்கிறார்கள், இந்த நிலையில் மேலும் 10,000 நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் காத்திருக்கும் எங்களுக்கு இன்டர்வியூ வழங்க வேண்டுமென்று 11,000 நபர்கள் கூறுகிறார்கள், அவர்கள் பணியமர்த்தப்படுவார்களா?

பதில்: இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறையான காவல் துறையிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் கொடுக்கும் விளக்கத்தைப் பொறுத்து உரிய முடிவு அறிவிக்கப்படும்.

கேள்வி: 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்கப்படவில்லை?

பதில் : இனிவருங்காலங்களில் எவ்வளவு காலிப் பணியிடங்கள் இருக்கிறதோ, அதற்குத் தகுந்தவாறு தேர்வு நடத்தி பணியமர்த்தப்படுவார்கள். இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெளிவாக தெரிவித்துள்ளார்.

கேள்வி: தமிழகத்தில் நீட்தேர்வு ரத்து செய்யப்படுமா?

பதில்: நாங்கள் கடுமையான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால், வெற்றி பெறவில்லை. நீதிமன்றம் வரை சென்றோம். ஆனால், நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை. தமிழக அரசைப் பொறுத்தவரை, நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பதைத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இருப்பினும், வேறு வழியில்லாமல் உச்சநீதிமன்றம் வரை சென்றும் முடியவில்லை. சட்டத்தின் மூலமும் நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை. இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று உள்ளது.

கேள்வி : வருகிற 21ம்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தெரிவித்து மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்துள்ளது. கேரளாவில் ஜனவரியில் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போது திறக்கப்படும்?

பதில்: தமிழகத்தைப் பொறுத்தவரை, கொரோனா நோய் பரவல் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இயல்பு நிலை திரும்பும்போது, பெற்றோர்களின் மனநிலையைப் பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும். அதாவது, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் என கருதுவார்கள், குழந்தைகளை பாதுகாப்பது அரசின் கடமை. இதையெல்லாம் ஆராய்ந்துதான் பள்ளிகள் திறக்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.