தற்போதைய செய்திகள்

ஆர்.கே.நகரில் கொரோனா தொற்று தடுப்பு பணி – அமைச்சர் க.பாண்டியராஜன், ஆர்.எஸ்.ராஜேஷ் ஆய்வு

சென்னை:-

தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனா தடுப்பு நிவாரண நடவடிக்கையாக ஆர்.கே.நகர் பகுதிக்குட்பட்ட நேதாஜி நகர், மற்றும் செரியன் நகர் பகுதி மாநகராட்சி பள்ளியில் அமைச்சர் க.பாண்டியராஜன், வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு
கொரோனா தடுப்பு களப்பணியாளர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு பாதுகாப்பு முகக் கவசம், கையுறைகளை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

தமிழக முதலமைச்சரின் ஆணையை ஏற்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் எனது தலைமையில் துரித ஆய்வு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் முழு ஒத்துழைப்புடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தாமதமின்றி விரைவு படுத்தப்படுகிறது. உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு முன்மாதிரி அரசாக செயல்பட்டு சென்னையில் ரூ.136 கோடியில் 750 படுக்கைகளுடன் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் காவல்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை குழுவினருடன் களப்பணியாளர்களும் இணைந்து பரிசோதனை முகாம்கள், நடமாடும் மருத்துவமனை, ஆங்கிலம், சித்த மருத்துவம் என மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்பட்டு இன்று சென்னை மாநகரத்தில் வைரஸ் தீவிரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நோய் தொற்று தடுப்பு பணிகளில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. களப்பணியாளர்களின் மூன்று மாத பரிசோதனை பணியால் இன்று 74 சதவீதம் நோய் தொற்று குறைந்து குணமானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்பணிகளில் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களுக்கு இனிவரும் நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா பயிற்சி, மூச்சு பயிற்சி, உள்ளிட்டவைகள் கற்றுத்தரப்படும். களப்பணியில் ஈடுபடும் பெண்கள் மீது களங்கம் ஏற்படுத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் க.சுப்புலட்சுமி, மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள், பகுதி கழக செயலாளர் ஆர்.எஸ்.ஜெனார்தனம், எம்.இராமமூர்த்தி, எம்.வேல்முருகன், குமுதா பெருமாள், ஜெ.எம்.நரசிம்மன், எல்.எஸ். மகேஷ்குமார், டி.பிரபாகரன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.