தற்போதைய செய்திகள்

பர்கூர் ஊராட்சி மலைவாழ் மக்களுக்கு எண்ணற்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்

ஈரோடு

பர்கூர் ஊராட்சி மலைவாழ் மக்களுக்கு எண்ணற்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

அந்தியூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்.கே.சி.கருப்பணன் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சரின் தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கொரோனா தொற்று காலத்தில் ஏழை, எளியோர் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கூட்டுறவு துறையின் மூலம் நகைக்கடன், சிறப்பு கடன், வீட்டு வசதி கடன், கறவை மாடு வளர்ப்பு கடன் மற்றும் சிறு வணிக கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து, மத்திய கூட்டுறவு வங்கி – இணைப்பு சங்கம் பொது விநியோக அங்காடிகள் மூலம் ஓய்வூதிய தொகை வழங்கும் நடைமுறை ஈரோடு மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியத் தொகையானது தற்பொழுது மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட தொகை இணைப்பு சங்கங்களின் பொது விநியோக திட்ட விற்பனையாளர்கள் மூலமாக அப்பகுதி பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வயதினர்களுக்கும் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று ஓய்வூதிய தொகை உடனுக்குடன் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதாந்திர உதவித்தொகை பெறும் பயனாளிகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் உதவித்தொகையினை பெறலாம்.

மேற்கு மலைப்பகுதிக்கு செல்ல மினி பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் வாழும் மக்கள் எளிதாக மின் கட்டணத்தை செலுத்த ஏதுவாக மின்கட்டணம் செலுத்தும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. செங்குளம் முதல் குட்டையூர் வரை சாலைகள் வசதிகள் மேம்படுத்த அலுவலர்கள் மற்றும் வனத்துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலம்பட்டி, சாலைப்பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. மேலும் சாலைகள் மற்றும் பாலங்கள் பணிகள் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் வசதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற எண்ணற்ற அடிப்படை வசதிகள் அனைத்து பர்கூர் ஊராட்சி மலைவாழ் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அரசு வழங்கும் இத்தகை சிறப்பான திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், கொரோனா தொற்று காலத்தில் அரசு வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.