தற்போதைய செய்திகள்

செங்கத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் வணிக மாதிரி வளாகம் அமைக்க நடவடிக்கை – முதலமைச்சர் தகவல்

சென்னை

செங்கத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வணிக மாதிரி வளாகம் ரூ.10 கோடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வேளாண் துறையிலும் பல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். பிரதம மந்திரிபயிர் காப்பீட்டுத்திட்டத்தில், கடந்த நான்காண்டுகளில் மட்டும் 1,91,612 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 145 கோடியே 27 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக அதிக அளவு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தந்த ஒரே அரசு அம்மாவின் அரசுதான். நுண்ணீர் பாசனத் திட்டத்தில், கடந்த 4ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 122 கோடியே 22 லட்சம் ரூபாய் மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகள் 85,006 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளன.

2020-21ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 108 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2016-2017ம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 1,24,802 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகையாக 69 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பகுதியில் உணவுப்பூங்கா ஒன்று, 25 கோடியே 51 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ், கடந்த மூன்றாண்டுகளில், ரூபாய் 16 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 216 பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டு, 32 ஆயிரத்து 600 சிறு, குறு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு இதற்காக ரூபாய் 4 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

செங்கத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வணிக மாதிரி வளாகம் ரூபாய் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. விநியோகத் தொடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூபாய் 9 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் வாழை பயிருக்கு முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு 4 இடங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள் அமைப்பதற்காக ரூபாய் 8 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கால்நடை பராமரிப்புத் துறையில், விலையில்லா ஆடுகள் மற்றும் விலையில்லா கறவைமாடுகள் இந்த மாவட்டத்தில் நிறைய நபர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.