தற்போதைய செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கிறது – முதலமைச்சர் தகவல்

சென்னை

விழுப்புரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இந்த மாவட்டத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேவையான மருத்துவ உபகரணங்கள் கையிருப்பில் உள்ளன. இந்நோய்த் தொற்றைத் தடுப்பதற்கு ஏற்கனவே மருத்துவ வல்லுநர்கள் குறிப்பிட்டவாறு, மாவட்ட அளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்தவேண்டும் என்ற ஆலோசனை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதன்மூலம், பல்லாயிரக்கணக்கானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொற்று அறிகுறி உள்ளவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து குணப்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல், எந்தவொரு பகுதியிலும் தொற்று ஏற்பட்டால் அதை, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டுவந்தால் உடனடியாக அந்தப் பகுதிக்கு நடமாடும் மருத்துவக் குழுவை அனுப்பி, அந்தப் பகுதி மக்களுக்கு பரிசோதனை செய்து, தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு வகைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிற காரணத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கிறது.

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் ஆரம்பிக்கப்படும். மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் ஆகியோர் இருப்பர். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருக்கும் இந்த சூழ்நிலையில், காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்பட்டால் கூட, அதற்கு சிகிச்சை பெற சிரமமாக உள்ளது. இந்தக் குறைகளைப் போக்க வேண்டுமென்பதற்காக, அம்மாவின் அரசு, இந்த அற்புதமான புதிய திட்டமான மினி கிளினிக்குகளை விரைவில் உருவாக்க இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

மினி கிளினிக்கிற்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும். இதனால் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களை மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கமுடியும். இதனால் ஏழை, எளிய மக்கள் மற்ற நோய்களிலிருந்து விடுபடுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலான வேளாண் தொழிலை நம்பி சுமார் 70 சதவிகித விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் நெல், கரும்பு, கடலை, சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், சென்னைக்கு அருகில் இருக்கின்ற காரணத்தினால் விவசாயிகள் அதிக வருமானம் பெறுவதற்காக காய்கறிகளை அதிகளவில் பயிரிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் கொய்யாப்பழம் அதிகளவு விளைவிக்கப்பட்டு, விற்பனைக்கு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு உழைப்பிற்கு பெயர் பெற்ற மாவட்டம் விழுப்புரம் மாவட்டம்.

அம்மாவின் அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன், இடுபொருட்கள் போன்றவற்றை உரிய நேரத்தில் வழங்கியதன் விளைவாகவும், நல்ல மழை பொழிந்த காரணத்தினாலும், தமிழகத்தில் இந்த ஆண்டு உணவு தானிய விளைச்சல் அதிகமாகி வேளாண் பெருமக்கள் நிம்மதியாக இருக்கக்கூடிய சூழ்நிலையை நாம் பார்க்கின்றோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.