தஞ்சை

கும்பகோணம் பகுதியில் கொரோனா தடுப்பு பணி – தஞ்சை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் நேரில் ஆய்வு செய்தார்.

கும்பகோணம் சக்கரபாணி படித்துறை திருமஞ்சன வீதியில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து சுப்பிரமணியபுரம் 1-வது தெருவில் வீடு வீடாக கொரோனா நோய்த்தொற்று குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை, மருந்து கையிருப்பு, இதர நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுவரும் புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவாக முடித்திடுமாறு அறிவுறுத்தினார். பின்னர், தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் போதிய இடைவெளி விட்டு கடைகளை திறந்திடுமாறும், முககவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கிருமிநாசினி தெளித்தல் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்திடுமாறு தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்.

முன்னதாக, தஞ்சாவூர் – விக்ரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வுகளின் போது மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ராமு, கும்பகோணம் வருவாய்க் கோட்ட அலுவலர் விஜயன், கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமி, கும்பகோணம் நகர்நல அலுவலர் பிரேமா, கும்பகோணம் வட்டாட்சியர் பாலசுப்ரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.