தற்போதைய செய்திகள்

இந்தியாவின் 2-வது பெரிய மின்னணு உற்பத்தி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது எல்காட் நடத்திய மின்னணு கருத்தரங்கில் அமைச்சர்கள் பேச்சு

சென்னை

எல்காட் நிறுவனம் நடத்திய மின்னணு கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத் ஆகியோர் இந்தியாவின் 2-வது பெரிய மின்னணு உற்பத்தி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று பேசினர்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 2020 கடந்த 7ம்தேதி தமிழ்நாடு மின்னணுவியல் வன்பொருள் கொள்கையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, சோர்ஸ் இந்தியா – எலக்ட்ரானிக்ஸ் சப்ளை செய்ன் – ன் 11-வது பதிப்பு 9 மற்றும் 10ம் தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (எல்சினா) தமிழகத்தை புரவலன் மாநிலமாக கொண்டு ஏற்பாடு செய்து, எல்காட் நிறுவனத்துடன் இணைந்து அனைத்து வழிகாட்டுதலுடன் ஏற்பாடு செய்தது.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் இந்நிகழ்ச்சிக்கு முதன்மை விருந்தினராக பங்கேற்று தொழில்துறை வல்லுநர்கள் மத்தியில் உரையாடினர். தமிழகத்தில் உள்ள மின்னணு மற்றும் வாகன தொழில்துறையின் வலுவான உற்பத்தி மாநிலமாக தமிழகம் விளங்குவதை எடுத்துரைத்தனர் மற்றும் இந்தியாவின் 2-வது பெரிய மின்னணு உற்பத்தி மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சியில் ஆண்டுக்கு 14 சதவீதம் அடைந்துள்ளதாவும் பேசினர்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகம் மின்னணு பொருள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறையை ஊக்குவிக்கவும் அடுத்த 4 –, 5 ஆண்டுகளில் நாட்டின் முதன்மை மாநிலமாக திகழ்வதற்கு நாங்கள் உறுதியுடன் செயல்பட கடமைப்பட்டுள்ளோம் என்று பங்கேற்பாளர்களுக்கு உறுதியளித்தார். கடந்த 15 ஆண்டுகளாக, இந்த உயர் தொழில்நுட்பத் துறையை தமிழகம் ஆதரித்து வருகிறது, மேலும் சாம்சங், ஃபாக்ஸ்கான், சால்காம்ப், டெல் கம்ப்யூட்டர்ஸ், சான்மினா-எஸ்சிஐ, ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், என்எஸ்என் மற்றும் பல சிறந்த உலகளாவிய வாகன நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன என்பதில் பெருமிதம் கொள்கிறது.

தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தமிழ்நாடு அரசு மற்றும் (பஞ்சாயத்து ராஜ்) தமிழ்நாடு வன்பொருள் கொள்கையின் முக்கியத்துவம் குறித்தும், ஈ.எஸ்.டி.எம் துறைக்கு மாநிலம் எவ்வாறு விருப்பமான இடமாக இருக்கிறது என்றும், எல்காட், மற்றும் கைடன்ஸ் நிறுவனத்தின் வழிகாட்டல் மூலமாக இந்த கொள்கை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர் அஜய் பிரகாஷ் சஹானே இந்நிகழ்வை அரங்கேற்றி, தனது அமைச்சகத்தின் தொலைநோக்கு மற்றும் மின்னணு துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்த மத்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து முயற்சிகள் மற்றும் கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய மின்னணு கொள்கை 2019ல் உள்ளடக்கிய மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி மற்றும் மின்னணு சாதனங்களின் முதலீட்டை மேம்படுத்த பி.எல்.ஐ, ஸ்பெக்ஸ் மற்றும் ஈ.எம்.சி 2.0 போன்ற மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அதிக ஆதரவு திட்டங்களைக் கொண்டிருந்தது. பி.எல்.ஐ திட்டத்தின் மூலம் மொபைல் உற்பத்தியில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது, இது அடுத்த 4-5 ஆண்டுகளில் ஒரு பெரிய உற்பத்தி தளத்தை உருவாக்கி உலக அளவில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

மேலாண்மை இயக்குநர் எல்காட் எம்.விஜயகுமார் தமிழ்நாட்டின் மின்னணு வன்பொருள் கொள்கை 2020ன் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான விளக்கக்காட்சியை வழங்கினார். உள்நாடு மற்றும் உலகளாவிய தொழில்துறையின் எண்ணங்களை பூர்த்தி செய்வதற்காக தொழில் துறை மற்றும் எல்சினா உறுப்பினர்களின் உள்ளீடுகளுடன் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பல புதிய வாய்ப்புகளைத் ஏற்படுத்துகிறது. இது நிதி நன்மை, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், புதுமை, தொழில்நுட்ப மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவு சேவைகளுக்கு உத்வேகம் அளிக்கிறது. தொடக்க நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்ஸ்), குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெரிய மற்றும் மிகப் பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தொழில்துறையின் இலக்கு 100 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது சவாலானது என்றாலும் அந்த இலக்கை அடையும் வழிமுறைகளை உள்ளடக்கி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சந்தைகள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் 2025 ஆம் ஆண்டில் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி சந்தைகளில் வளர்ந்து வரும் வாய்ப்புகளுடன் இணைந்து, தமிழ்நாட்டின் ஈ.எஸ்.டி.எம் துறை நிச்சயமாக ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது.

தமிழக மாநிலத்தை மையமாகக் கொண்டு உயர் தொழில்நுட்ப விரிவாக்கம் மற்றும் திறனை வெளிப்படுத்தவும் மின்னணு உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான இடமாக சென்னையில் 2009ம் வருடம் எல்சினாவால் “சோர்ஸ் இந்தியா” நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழக அரசின் ஆதரவு மற்றும் அணுகுமுறை மூலமாக ஏராளமான மின்னணு உற்பத்தி நிறுவனங்களை ஈர்த்துள்ளது. இந்நிகழ்வு கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் தொடர்ச்சியாக சென்னையில் நடைபெறுகிறது. முக்கிய பங்காளர்கள் மற்றும் பெறுவோர் மற்றும் விற்போர் இடையில் ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவதற்கான ஒரு கண்காட்சி மற்றும் வணிகத்திற்கு வணிகம் (பி 2 பி) கூட்டங்கள் இந்த மாநாடு மூலம் அறிவு பகிர்வுக்கு சோர்ஸ் இந்தியா வழிவகை செய்கிறது.

சோர்ஸ் இந்தியா கருத்தரங்கின் குறிக்கோள்கள் வருமாறு:-மின்னணு மதிப்பு சங்கிலியின் அனைத்து பங்குதாரர்களையும் ஒரே மேடையில் கொண்டு வருவதன் மூலம் அறிவு பகிர்வு. அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய மின்னணுத் தொழிலுக்கான உள்நாட்டு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த உதவுதல்.எலெக்ட்ரானிக்ஸ் துறையில் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

நுகர்வோர் மின்னணுவியல், தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள், தாணியங்கி மின்னணுவியல், கைபேசிகள், மின்சார வாகனங்கள், விளக்கு மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய ஈ.எஸ்.டி.எம் துறையின் அனைத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஈடுபடுத்துதல். கொள்கைகள நன்கு புரிந்துகொள்வதற்கு அரசாங்கத்திற்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தல். மின்னணு துறையில் முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவை ஆகும்.