தற்போதைய செய்திகள்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் – முதலமைச்சர் தகவல்

சென்னை

விழுப்புரம் மாவட்டம்,கூனிமேட்டில் ரூ 1,450 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

வேளாண் தொழில் அதிகமாகவுள்ள இந்த மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தையும் உள்ளடக்கிய விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டுகளில் 3.41 இலட்சம் விவசாயிகளுக்கு

ரூபாய் 293.35 கோடி இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தரப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை. இதற்கு முன்பு இவ்வளவு பெரிய தொகையை இழப்பீடாக பெற்றுத் தந்த சரித்திரம் கிடையாது. அந்தச் சரித்திரத்தை அம்மாவின் அரசு படைத்துள்ளது. நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூபாய் 210.03 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

2020-21ல் இந்த நுண்ணீர் பாசனத் திட்டத்திற்காக விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூபாய் 90.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2016-2017ஆம் ஆண்டில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி இணைந்திருந்த காலத்தில் 40 ஆண்டு காலம் இல்லாத கடும் வறட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட 54,434 விவசாயிகளுக்கு ரூபாய் 80.60 கோடி மானியமாக அம்மா அரசால் வழங்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றிலேயே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிய ஒரே அரசு அம்மாவின் அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத்தில் ரூபாய் 53 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் செலவில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு 77,370 விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். பெலாக்குப்பம் பகுதியில் ரூபாய் 25 கோடியே 56 இலட்சம் மதிப்பீட்டில் உணவுப்பூங்கா ஒன்று அமைக்க திட்ட மதிப்பீட்டுப் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பல அடுக்கு கிட்டங்கி ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது.

நீண்ட, நெடிய நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள குடிநீர்ப் பிரச்சனைகளைத் தீர்க்க மரக்காணம் அருகிலுள்ள கூனிமேட்டில் ரூபாய் 1,450 கோடி மதிப்பீட்டில் 60 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சிகள், மரக்காணம், வானூர், மயிலம், விக்கிரவாண்டி, காணை ஒன்றியங்களிலுள்ள 692 குடியிருப்புகளைச் சேர்ந்த சுமார் 7.50 இலட்சம் மக்கள் குடிநீர் வசதி பெறுவார்கள்.

இவ்வாறு எந்தவொரு ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு சாலைப் பணிகள், பாலப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விழுப்புரம் மாவட்டத்திற்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் அம்மாவின் அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. சட்டத்துறை அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் இம்மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக் கிறார்கள். ஏறத்தாழ 20 ஆண்டு காலம் செய்ய வேண்டிய திட்டங்களை 4 ஆண்டுகளில் செய்து முடித்த அரசு அம்மாவின் அரசு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.