சிறப்பு செய்திகள்

அரசு கால்நடை கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணி அதிகாரிகளுடன், துணைமுதலமைச்சர் கலந்தாய்வு

தேனி

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

துணை முதலமைச்சரின் தொடர் முயற்சியால், தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட தேவதானப்பட்டி அருகில் செயல்பட்டு வரும் தனியார் கட்டடத்தில் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்காலிகமாக அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தேனி மாவட்டத்தில் கால்நடை சார்ந்த வளர்ச்சி திட்டங்களை மேலும் துரிதப்படுத்துவதற்கும், கால்நடை பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் தமிழக அரசு ஆறாவது கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமத்தில் ரூ.265.00 கோடி செலவில் நிறுவுவதாக அறிவித்து, அதில் முதற்கட்டமாக முதலாம் ஆண்டிற்கு ரூ.94.72 கோடிக்கான நிதியினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து உத்தவிட்டுள்ளது.

அதன்படி, தேனி மாவட்டத்தில் புதிய அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கென சொந்த கட்டிடத்தில் அமைப்பதற்காக, தேனி வட்டத்திற்குட்பட்ட தப்புக்குண்டு மற்றும் வீரபாண்டி கிராமத்தில் இடம் தேர்வுசெய்யப்பட்டு, அந்த இடத்தினையும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 4.08.2020 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, இப்பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில் துணை முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி, புதிய அரசு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித்துறையை சார்ந்த முதன்மை அலுவலர்கள் பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன்படி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவகல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவிபல்தேவ், முன்னிலையில் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சி.பாலசந்திரன் பதிவாளர் முனைவர் பா.டென்சிங் ஞானராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் நேற்று கலந்தாய்வு மேற்கொண்டார்.

மேலும் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், அதன் மாதிரி வரைபடத்துடன் அதன்பாதை மற்றும் இக்கட்டிடம் அமையவுள்ள பகுதியில் சாலை, தண்ணீர் வசதி ஆகியன குறித்தும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

மேலும், இப்பணிகளை விரைவில் தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். இந்த கலந்தாய்வின் போது, கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) மாதவன், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.