தற்போதைய செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை வரும் 13ம்தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

வரும் 13ம்தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி நம்பியூர் ஒன்றியத்தில் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியை பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார். மேலும் நம்பியூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் பொலவபாளையம் பொன்னுசாமி 500 பேருடன் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாட திட்டம் கடந்த ஆண்டு இருந்த நடைமுறையே பின்பற்றப்படும். வரும் 13ம்தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார். 13ம்தேதிக்குள் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்ட பின்னர் ஆன்லைன் வகுப்பு தொடங்கப்படும். முழுமையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பட்டியல் தயார் செய்த பின் மதிப்பெண் வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தனியார் கூரியர் மூலம் அனுப்பப்படவில்லை. நேரடியாக மட்டுமே வழங்கப்படும்.34,482 மாணவர்கள் 12ம்வகுப்பு இறுதி தேர்வு எழுதவில்லை. அதில் 718 மாணவர்கள் மட்டுமே மீண்டும் தேர்வை எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுவரை தேர்வெழுத விருப்பம் தெரிவிக்காத மாணவர்களும் தேர்வு எழுதலாம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிந்த 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். நீட்தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. அதில் 7100 மாணவர்களுக்கு முழு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்,

இந்நிகழ்ச்சியில் நம்பியூர் ஒன்றிய கழக செயலாளர் தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியம், ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கெளசல்யா தேவி, சேரன் சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.