தற்போதைய செய்திகள்

ரூ.86.36 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் வழங்கினர்

திருநெல்வேலி

திருநெல்வேலி மண்டல கூட்டுறவுத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.2.17 கோடி மதிப்பிலான கட்டடங்கள் மற்றும் 10 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை திறந்து வைத்து 9,850 பயனாளிகளுக்கு ரூ.86.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் வழங்கினர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் இல சுப்பிரமணியன், , மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.2.17 கோடி மதிப்பிலான கட்டடங்கள் மற்றும் 10 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை திறந்து வைத்தனர்.

அதைத்தொடர்ந்து 3,073 விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.2,948.20 லட்சம், 5,184 மகளிருக்கு மகளிர் சுய உதவிக் குழுக் கடனாக ரூ.3,285.97 லட்சம், 12 நபர்களுக்கு கோவிட்-19 கடனுதவியாக ரூ.3 லட்சமும், 534 பயனாளிகளுக்கு சிறு வணிகக் கடனாக ரூ.147.15 லட்சம், 590 பயனாளிகளுக்கு மத்தியகாலக் கடனாக (கறவை மாடு) ரூ.975.41 லட்சம், 28 மாற்றுத்திறனாளிகளுக்கு கடனாக ரூ.35.50 லட்சம் உட்பட பல்வேறு கடனுதவிகள் என மொத்தம் 9,850 பயனாளிகளுக்கு ரூ.86.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

இவ்விழாவில் கூட்டுறவு சங்க பதிவாளர் இல.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.முருகையாபாண்டியன், ஐ.எஸ்.இன்பதுரை, செல்வமோகன்தாஸ் பாண்டியன், ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், கூட்டுறவுத்துறையின் சிறப்பு அணி அலுவலர் கா.ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர் கு.ரவிகுமார், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ந.கணேசராஜா,கூட்டறவு சங்க இணைப்பதிவாளர் பிரியதர்ஷினி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், கூட்டுறவாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறையின் உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திருநெல்வேலி மண்டல கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.