மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக இளைஞர் அணி சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணம் – மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா வழங்கினார்

மதுரை

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் 300 ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ வழங்கினார்

மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு, அரிசி காய்கறி மற்றும் எரிபொருள் நிரப்ப நூறு ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் எம்.ரமேஷ் தலைமை தாங்கினார்.

திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் ஆர்.முத்துக்குமார், பகுதி கழக செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் எம்.ஆர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி இலக்கிய அணி செயலாளர் மோகன்தாஸ், வட்ட கழக செயலாளர்கள் என்.எஸ்.பாலமுருகன், கோபால், மரக்கடை முருகேசன், பொன்முருகன், கர்ணா, சோ.ராசு ஆகியோர் வரவேற்புரையாற்றினர்

நிகழ்ச்சியில் வி.வி.ராஜன்செல்லப்பா பேசியதாவது;-

கடந்த 5 மாதங்களாக நீங்கள் சிரமம் அடையாமல் இருக்க நமது முதலமைச்சர் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 36 லட்சம் பேருக்கு 2000 ரூபாய் நிவாரண நிதியாக வழங்கினார். அதுமட்டுமல்லாது ரேஷன் கடை மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய் , சர்க்கரை ஆகியவற்றை வழங்கினார். இதன் மூலம் நீங்கள் பயன் அடைந்தீர்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் சில தளர்வுகளை முதலமைச்சர் வழங்கி உள்ளார், முதலமைச்சர் அறிவித்த அனைத்து விழிப்புணர்வை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அதேபோல் உங்கள் வாகனத்தில் வரும் மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக ஆட்டோ தொழிலாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பணம் வாங்காமல் சேவை செய்து வருவதை அனைவரும் பாராட்டுகின்றனர். உங்களைப் போன்ற தொழிலாளர்களை காக்கும் அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை தந்து இன்றைக்கு, இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்தி உள்ளது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஆகவே உங்கள் வாகனங்களில் வரும் மக்களிடத்தில் கழக அரசின் சாதனை எடுத்துக் கூறுங்கள் உங்களைப் பாதுகாக்கும் அரசாக அம்மாவின் அரசு என்றைக்கும் திகழும்.

இவ்வாறு அவர் கூறினார்.