தமிழகம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும் முதலமைச்சர் பேட்டி

சென்னை

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எட்டு வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசுசெயல்படுத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி – எட்டு வழிச்சாலை தொடர்பாக ஐந்து மாவட்ட மக்கள் போராடி கொண்டு வருகிறார்கள். அரசின் நிலைப்பாடு என்ன.

பதில் – நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். இதுமத்திய அரசின் திட்டம்.மாநில அரசின் திட்டம் கிடையாது. இன்றைக்கு நாடு வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேஇருக்கிறது. 2001-ல் இருந்த வாகனங்களின் எண்ணிக்கை போல் தற்போது இருக்கின்ற வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 350 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. அப்படி 350 சதவிகிதம் வாகனங்களின் எண்ணிக்கைஉயர்கின்ற போது, சாலை வசதியை விரிவுப்படுத்த வேண்டாமா? அதன் அடிப்படையில் தான் மத்திய அரசாங்கம் இந்த சாலை விரிவாக்கப் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதை ஒரு பசுமை வழிச்சாலையாக, எக்ஸ்பிரஸ் வே என்ற முறையில் தான் அந்தசாலையை அகலப்படுத்தி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தது. அதற்குநிலம் எடுக்கின்ற பணி தான் மாநில அரசிற்கு இருக்கிறது. மற்றவை எல்லாம்மத்திய அரசின் திட்டம். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதுமட்டுமல்ல,பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்றால் தொழிற்சாலைகள் அதிகமாக வரவேண்டும். அப்படி தொழிற்சாலைகள் அதிகமாக வரவேண்டும் என்று சொன்னால்,உட்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும்.

எந்த ஒரு நாட்டில், எந்த ஒருமாநிலத்தில் உட்கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறதோ, அந்த மாநிலத்தில் தான்தொழில் வளர்ச்சி அடையும். எல்லா திட்டங்களும் சேலத்திற்கு தான் போகிறதுஎன்று நினைக்கிறார்கள். அப்படி அல்ல. சென்னையிலிருந்து சேலம் வழியாகஅந்தச் சாலை செல்கிறது. உங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் வழியாக தான்செல்கிறது. நீங்களும் பயன் அடைவீர்கள். ஆக சாலை விரிவாக்கம் என்பதுஏற்கனவே இருந்தது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இன்றைக்கு சுங்கச்சாவடிகள் அமைத்து தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக சாலைகள் அமைக்கப்படுகிறது. அப்போது சுமார் 794 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை எடுத்தார்கள். அப்போது விவசாயிகள் எல்லாம் பாதிக்கப்படவில்லை. இப்போது தான் பாதிக்கப்படுவதாக எதிர்கட்சிகள் எல்லாம் சொல்கிறார்கள். ஆகவே, அந்தந்த காலக்கட்டத்திற்கு தக்கவாறு, போக்குவரத்துக்கு தக்கவாறு, விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வேண்டும்,குறைந்த நேரத்தில் பயணிக்க வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும், இந்த அடிப்படையில் தான் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது.

இந்த திட்டம் கொச்சின் வரைக்கும் செயல்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிக்கு தங்குதடை இல்லாமல், போக்குவரத்துநெரிசல் இல்லாமல், கனரக வாகனம் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தான்மத்திய அரசாங்கம் இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இது ஒரு மிகப்பெரிய திட்டம். பல விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினாலே,உச்சநீதிமன்றத்திலே வழக்கு நிலுவையில் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் அளிக்கின்ற தீர்ப்பின்படி மத்திய அரசாங்கம் செயல்படும். இது மத்திய அரசின் திட்டம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.