தேனி

வீடுகளுக்கு நேரடியாக மளிகை பொருட்கள் வழங்க நடவடிக்கை – தேனி ஆட்சியர் தகவல்

தேனி, மார்ச் 29-

கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வீடுகளுக்கு நேரடியாக மளிகை பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், குற்றவியல் நடைமுறைச் சட்டபிரிவு 144–-ன் கீழ் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள் மற்றும் காய்கறி மண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினர்கள் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுக்கும் விதமாக சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், தேனி மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவு 144-–ன் கீழ் ஊரடங்கு கடந்த 24.03.2020 அன்று மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டு, தேனி மாவட்டத்தில் களப்பணியில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப் பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியவர்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், தேவையில்லாத காரணங்களால் வெளியில் சுற்றி வரும் நபர்களின் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்களின் தேவைகள் தங்குதடையின்றி கிடைத்திடும் வகையிலும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அரசின் விதிமுறைகளுக் குட்பட்டு, மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகள் மற்றும் காய்கறி மண்டிகளின் உரிமையாளர்கள், சங்கத்தினர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை சரக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்வதற்கு ஏதுவாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை (பொது) தொடர்பு கொண்டு அனுமதி அட்டை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட அனுமதி அட்டை பெறுவதற்கு ஒவ்வொரு கடை உரிமையாளர் களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளாமல், சங்கத்தின் வாயிலாக மொத்தமாக கடிதத்தின் மூலம் வழங்கப்பட்டு, அனுமதி அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி பணிபுரியும் பணியாளர்களுக்கான அடையாள அட்டை மற்றும் கடை உரிமையாளர்களுக்கான அடையாள அட்டை ஆகியவைகளையும் மேற்கண்ட அறிவுறையின்படி, பெற்றுக் கொகள்ளலாம். மேலும், வியாபார ரீதியாக வெளிமாநிலங்களிலிருந்து நமது மாவட்டத்திற்கு வருகின்ற விளைபொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் ஆகியவைகளை மாவட்ட எல்லையை கடந்து வருவதற்கும், சம்பந்தப்பட்ட மாநிலங்களிலிருந்தும் பொருட்கள் வருவதற்கான சிரமங்கள் ஏதேனும் இருப்பின், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பதன் அடிப்படையில், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு, தங்களின் வீடுகளுக்கு நேரடியாக பொருட்கள் வழங்கப்படும். அதற்கான மொத்த விலையில் குறிப்பிட்ட சதவீதம் குறைக்கப்படும். பொருட்களை தினந்தோறும் கடைகளில் வந்து நேரடியாக வாங்கி கொள்ளாமல் குறைந்தது ஒரு வார காலத்திற்கு தேவையான பொருட்களை சேர்த்து வாங்கி வைத்துக் கொள்ளவும், பொதுமக்களுக்கு கடை உரிமையாளர்கள் அறிவுறுத்திட வேண்டும். காய்கறி கடைகள், மளிகை கடைகளில் வியாபாரிகள் கையுறை, முகவுறை அணிந்து, கைகழுவுவதற்கு தேவையான சோப்பாயில் மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டு, பொதுமக்கள் கைகழுவிய பின் பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக, சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், தேனி மாவட்டத்தில் தேனி உழவர் சந்தை நேற்றைய தினம் முதல் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் இயங்கி வருகிறது. அதேபோன்று, மளிகை கடை மற்றும் காய்கறி மண்டிகளின் உரிமையாளர்கள், சங்கத்தினர் களின் கோரிக்கைக்கிணங்க, சின்னமனூர், போடிநாயக்கனூர், கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட கடைகளை பேருந்து நிலையங்களுக்கு இடமாற்றம் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் நலன் கருதி அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு மளிகை கடை மற்றும் காய்கறி மண்டிகளின் உரிமையாளர்கள் மற்றும் சங்கத்தினர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவிபல்தேவ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரமேஷ், அரசு அலுவலர்கள், மளிகை கடை மற்றும் காய்கறி மண்டிகளின் உரிமையாளர்கள், சங்கத்தினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.