தமிழகம்

விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை ரூ.43 கோடியில் புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் – முதலமைச்சர் தகவல்

சென்னை

விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணை ரூ.43 கோடியில் புனரமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விழுப்புரம் மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு;-

அமைச்சரும், பொதுமக்களும் வைத்த கோரிக்கையின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. வீடூர் அணை 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

நீண்ட நாள் கோரிக்கையான நந்தன் கால்வாய் திட்டம் சுமார் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்படும். விழுப்புரம் நகரத்தில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்கனவே ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரம் விரிவாக்கம் செய்யப்பட்டது 252 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற 268 கோடி ரூபாயில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மரக்காணம் வட்டம், கல்வேலி ஏரியில் கடல்நீர் உட்புகாமல் இருப்பதற்கு ரூபாய் 121 கோடி மதிப்பீட்டில் அதனை சீரமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும். திண்டிவனத்தில் சிப்காட் சார்பாக உணவுப் பூங்கா ஒன்று அமைக்க ரூ.2500 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக் கூடிய வகையில் சூழ்நிலை உருவாகும்.

நீண்ட காலமாக பத்திரிக்கை நண்பர்கள் வீட்டு மனைப்பட்டா வேண்டும் என்று வைத்த கோரிக்கைகளை ஏற்று, 53 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிய அரசும் அம்மாவின் அரசு.

விழுப்புரம் மாவட்டம் வானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு தொடங்கப்பட்டு இவ்வாண்டு மாணவர் சேர்க்கையும் தொடங்கப்படும். இந்த மாவட்ட மக்களுக்கு ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் அரசு சட்டக் கல்லூரியையும் கொடுத்துள்ளோம். சட்டத் துறை அமைச்சர் அந்த சட்டக் கல்லூரிக்கு ரூபாய் 5 கோடி செலவில் நூலகத்தை கட்டித் தந்திருக்கின்றார். இந்த நூலகம் பெங்களூரில் உள்ள நூலகத்திற்கு இணையாக உள்ளது.

2017-18 ஆம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி ஒன்று உருவாக்கித் தரப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், பி.எட் கல்லூரிக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது, விரைவில் பி.எட் சேர்க்கை நடைபெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். இங்கு இயங்கி வரும் திறந்தவெளி பல்கலைக் கழகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. இம்மாவட்டத்தில் 4 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 7 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.