சிறப்பு செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்

கோவை

முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், உயிரிழப்பு மிகவும் குறைவாக உள்ளது. மேலும், தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திட அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களின் மேலான ஒத்துழைப்பினை அளிக்க வேண்டுமென கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மையமாக திகழ்ந்து வருகின்றது. இதன்காரணமாக நாள்தோறும் தொழிலாளர்கள், பொதுமக்கள் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் அதிகளவில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினந்தோறும் சுமார் 7,000-த்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுவரை 9,344 சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 9 இலட்சத்து 90 ஆயிரத்து 317 நபர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பு பணிகளை மேற்கொள்ள கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாநகரப்பகுதிகளை 5 மண்டலங்களாகவும், ஊரகப்பகுதிகளை 5 மண்டலங்களாகவும் பிரித்து மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் 5 அலுவலர்களும், துணை ஆட்சியர் நிலையில் 5 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 62 ஆயிரத்து 412 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தற்போது வரை 20,393 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 16,162 நபர்கள் தற்போது வரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பல்வேறு நோய் தொடர்பிலிருந்த 332 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 3,454 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 9,178 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நோயாளிகளுக்கு எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் வகையிலான உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து உணவுகளுமே தரமானதாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டும், வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு, காலை 6.30மணி பால் அல்லது அரிசி கஞ்சி (விருப்பப்படி), காலை 8.00 மணி கபசுர குடிநீர், காலை 8.30 மணிக்கு பொங்கல். இட்லி. ஊத்தப்பம். உப்புமா. வெங்காய ஊத்தாப்பம்,பூரி , ரொட்டி, இடியாப்பம், ஏதேனும் இரண்டு வகை), தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார், சுண்டல் மசாலா, காலை 10 மணிக்கு வைட்டமின் சி பானம், வாழைப்பழம், சாத்துக்குடி, காலை 10.30 மணிக்கு இஞ்சி எலுமிச்சை சாறு,சத்துமாவு கஞ்சி, நண்பகல் 12 மணிக்கு மிளகு ரசம், மதிய உணவு 1 மணிக்கு சாப்பாடு, சாம்பார், ரசம், காய்கறி பொரியல், அல்லது தக்காளி சாதம், தேங்காய் சாதம், காய்கறி நெய் சாப்பாடு (ஏதேனும் ஒன்று) மற்றும் தயிர்சாதம், ஒரு வேகவைத்த முட்டை, மாலை 4 மணிக்கு டீ, போன்வீட்டா, காய்கறி சூப் மற்றும் சுண்டல், இரவு 8 மணிக்கு சப்பாத்தி,தோசை,கிச்சடி,தொட்டி, (ஏதேனும் இரண்டு) காய்கறி குருமா, சட்னி, சாம்பார், குழந்தைகளுக்கு பால், அரிசி கஞ்சி மற்றும் பிஸ்கட் எப்போது கேட்டாலும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும், கொடிசியா அரங்கத்தில் அமைக்கப்பட்ட சித்தா முறை சிகிச்சை மையத்தில் 591 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் தற்போது 432 நபர்கள் பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 159 நபர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.கோயம்புத்தூர் மாநகர மற்றும் ஊரகப் பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், 320-பிரச்சார வாகனங்கள்; மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 8 லட்சம் ஏழை எளிய குடும்பங்களுக்கு அரிசி, டீதூள், பொட்டுக்கடலை, துவரம்பருப்பு, சமையல் எண்ணெய், வரமிளகாய், ஆகிய 11 அத்தியவாசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பும், காய்கறி தொகுப்பும் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே, முதலமைச்சர் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சிறப்பு முயற்சியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 10 லட்சம் குடும்பங்களுக்கு 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம், ஜிங்க் மாத்திரைகள், மல்டி விட்டமின் மாத்திரைகள் ஆகியவை அடங்கிய நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதிலும், அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாயிலாக கொரோனா நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வகுத்து கொடுத்துள்ள அடிச்சுவடுகளை பின்பற்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையிலான பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம்;, வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்துநிலையம், அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிராமப்பகுதிகளையும் நகரப்பகுதிகளுக்கு இணையாக மேம்பாடு அடையவும், சாலை, சுகாதாரம், சுற்றுச்சூழல் என அனைத்து வகைகளிலும் தன்னிறைவு அடைய வேண்டுமென பல்வேறு முன்னோடித் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கொரோன வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களை காக்க தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மக்கள் நலன் காக்க அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், தனிமனித சுகாதாரம்;, சமூக இடைவெளி, வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிதல், வெளியில் சென்று திரும்பிய பின் கை, கால்களை சுத்தம் செய்தல் ஆகியவையே கொரோனா தொற்றிலிருந்து ஒவ்வொருவரையும் காக்கும் என உணர்ந்து இவைகளை தவறாது கடைபிடித்து, அரசின் நடவடிக்ககைகளுக்கு வலுசேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.