தற்போதைய செய்திகள்

அதிமுகவின் அபார வளர்ச்சியை கண்டு ஸ்டாலினுக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி

அதிமுகவின் அபார வளர்ச்சியை கண்டு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, புதிய பூத் கமிட்டி நிர்வாகிகள், மற்றும்‌ புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்த தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட கழக இணைச்செயலாளர் செரினா பாக்யராஜ், மாவட்ட கழக துணை செயலாளர்கள் சந்தனம், வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ கழகச் செயல்வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி புதிய பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைகளையும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தலுக்கான கழக உறுப்பினர் படிவத்தையும் வழங்கினார்.

அப்போது அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-

தமிழகத்தில் தேர்தலை கண்டு அஞ்சும் கட்சி அதிமுக அல்ல. 2011ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா சேலை கட்டிய சிங்கமாக மக்களின் துணையுடன் தேர்தலில் தன்னந்தனியே களம் கண்டு அபார வெற்றி பெற்று ஆட்சியமைத்தார். அந்த தேர்தலில் திமுக என்ற கட்சிக்கு எதிர்க்கட்சியில் கூட இடம் கிடைக்காத அளவிற்கு படு தோல்வியை கண்டனர். என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள

இந்நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக மக்கள் விரும்பும் நல்லாட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அம்மாவின் நல்லாட்சியையும் அதிமுக தொண்டர்களின் எழுச்சியையும் கண்டு மட்டுமே தற்போது பயப்படுகிறார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றி பெற போகிறது என்பது, உறுதியாகி விட்ட நிலையில் நானும் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ.வும் ஒன்றிணைந்து இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு இந்த மாவட்டத்தில் உள்ள6 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றி அந்த வெற்றிக்கனியை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பொற்கரங்களில் சமர்ப்பிக்க இப்போதே பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறோம்

வருகின்ற 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி முதல் திருத்தணி சட்டமன்ற தொகுதி உட்பட தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறப்போவது புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சியை வழிநடத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தான் என்பதை நிரூபித்து தமிழக மக்களுக்கு மீண்டும் அம்மாவின் நல்லாட்சியை அமைக்கும். இதுதான் 2021,ல் ஆண்டவன் தீர்ப்பாக அமையும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.