தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நட அரசு திட்டம் மாநில வளர்ச்சி – சி.பொன்னையன் தகவல்

சென்னை

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாளையொட்டி ரூ.191.85 கோடி மதிப்பில் தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் பசுமைத் தாவரங்களின் சதவிகிதம் குறித்த செயற்கைக்கோள் படங்கள் அடிப்படையிலான ஆய்வு” வரைவு அறிக்கை விளக்க காட்சிக் கூட்டம் மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் சி.பொன்னையன் தலைமையில் சென்னை எழிலகத்தில் உள்ள மனிதவள மேம்பாட்டு காணொலி கூட்டரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம், மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு குழுமத் தலைவர் (நிலப் பயன்பாடு) பு.செ.அர்ச்சனா கல்யாணி மற்றும் தமிழ்நாடு நிலப்பயன்பாட்டு ஆராய்ச்சி வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் துணைத்தலைவர் சி.பொன்னையன் பேசியதாவது:-

இந்திய அளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 48.45 சதவிகித மக்கள் தொகை கொண்டு நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக மூன்றாம் இடத்தில் உள்ளது. நகர்ப்புற பசுமை அல்லது நகர்ப்புற வனவியல் என்பது நகரவாசிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க பிரதான வழியாகவும், நிலையான வளர்ச்சியில் ஒன்றாகவும் திகழ்கிறது. நகர்ப்புற வளர்ச்சிக்கான மிகப்பெரிய சவால் நகர்ப்புற பசுமையை உறுதி செய்வது மட்டுமல்லாமல் தற்போதுள்ள பசுமை நிலையை பராமரிப்பதுமாகும். மரங்கள் நிலப்பரப்பை பசுமையாக்குவதற்கும், காற்றை சுத்திகரிப்பதற்கும், ஆற்றல் பயன்பாட்டை குறைப்பதற்கு ஒரு கருவியாக பயன்படுகின்றது.

செயற்கைக்கோள் புகைப்பட உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பசுமை ஆய்வின்படி சென்னை பெருநகர பகுதியில் 12,293.26 ஹெக்டேர் (10.23 சதவீதம்), மதுரை மாநகராட்சியில் 1305.79 ஹெக்டேர் (8. 79 சதவீதம்), கோயம்பத்தூர் மாநகராட்சியில் 4514.48 ஹெக்டேர் (17.54 சதவீதம்); திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 1826.53 ஹெக்டேர் (12.62சதவீதம்); சேலம் மாநகராட்சியில் 1629.73 ஹெக்டேர் (16.60 சதவீதம்) பரப்பளவில் மரங்கள் உள்ளன. கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிகளில் உள்ள தென்னந்தோப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால் இங்கு பசுமை அதிகமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாளையொட்டி ரூ.191.85 கோடி மதிப்பில் தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நட நடவடிக்கை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மேற்கொண்டுள்ளார். மேலும், இந்த மாபெரும் மரம் நடும் திட்டமானது தமிழகத்தில் 2012-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

இத்திட்டம் தமிழக அரசு வனப் பகுதிகள், பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள், அரசு வளாகங்கள், பூங்காக்கள், பெரிய குடியிருப்பு பகுதிகள் மற்றும் மாநிலம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறது.

இவ்வாறு துணைத்தலைவர் சி.பொன்னையன் பேசினார்.

இக்கூட்டத்தில் பேராசிரியர் ஜி.ஆர்.சந்திரசேகர், சென்னை நிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் துணை வனப்பாதுகாவலர் கே.ராம்மோகன் ஆகியோரை வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் சி.பொன்னையன் பாராட்டினார்