தற்போதைய செய்திகள்

திமுகவில் ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தீர்மானம் போடலாம் ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய மக்கள் விரும்புகிறார்கள் – அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

திமுகவில் ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தீர்மானம் போடலாம் ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய மக்கள் விரும்புகிறார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கொத்தவால் சாவடி, துறைமுகம் பகுதியில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்ப்பு முகாம் மீனவளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையிலும், வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா, முன்னிலையிலும் பகுதி கழக செயலாளர்கள் கே. கண்ணியப்பன், வி.பி.எஸ். மதன் ஆகியோர் வரவேற்புரையில் நடைபெற்றது.

ஆலோசனைக்கூட்டத்தில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

ஒவ்வொரு பூத்திற்கு தொழிநுட்பம் சார்ந்தவர்களும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை சேர்ந்தவர்களும் பங்களிப்பு இருக்க வேண்டும். புதிதாக இணைந்துள்ள இளைஞர்களை புத்துணர்ச்சி ஏற்படுத்தி புது இரத்தம் புகுந்தது போல பணிகளை செய்ய வேண்டும். முதலமைச்சர். துணை முதலமைச்சர் ஆலோசனைப்படி நடந்து வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பூத்திற்கு தலா ஒருவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கழகத்திற்கு இவர்கள் ஆணி வேர் போல செயல்படுவார்கள். அதிமுக ஒரு எஃகு கோட்டை. அம்மா அவர்கள் அப்பொழுதே இளைஞர் இளம்பெண்கள் பாசறையை உருவாக்கி வலுசேர்த்து கொடுத்திருக்கிறார். அறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு கழகத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நிலைநாட்டினார். அம்மா மறைந்த பின்பு அதிமுக கலைந்து விடும் என்று திமுக எண்ணியது. ஆனால் கழகத்தை ஆலமரம் போல உருவாக்கி முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்கள்.

மக்கள் செல்வாக்கில் நாம் உள்ளோம். மக்களோடு மக்களாக நாம் உள்ளதால் நமது ஓட்டு சிந்தாது, சிதறாது. நமக்கு எதிர்க்கட்சியே திமுக தான். தேர்தல் நேரத்தில் திமுகவை எதிர்கட்சியாக தான் நினைத்து செயல்பட வேண்டும். ஒட்டு உறவு எதுவும் இருக்க கூடாது. அம்மா அரசின் திட்டங்களை கழகத்தினருடன் சேர்ந்து இளைஞர்கள் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்தவர்கள் மக்களிடத்தில் எடுத்து கூறினாலே நாம் வெற்றி பெறுவது நிச்சயம். வந்திருக்கும் உங்களின் பங்கு முக்கியமானது. என்றும் கழகத்துடன் சேர்ந்து வெற்றிக்காக பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் கு.சீனிவாசன், முன்னாள் மாவட்ட செயலாளர் புரசை எம்.கிருஷ்ணன், ஆர்.எம்.டி.ரவிந்திரஜெயின், பகுதி கழக செயலாளர்கள் கண்ணியப்பன், வி.பி.எஸ்.மதன், தலைமை கழக பேச்சாளர் பிராட்வே எல்.குமார், மற்றும் ஆவின் அருள்வேல், வழக்கறிஞர் ஆர்.கே.ஜோதி, வட்ட செயலாளர் பி.டி.சேகர், ஆசைரவி, தக்காளி ரவி, சௌந்திரராஜன், கருணாநிதி, ராஜன் அனிதா, வீரபத்திரன், கே. செல்லம்மா, வெற்றிலை மாரிமுத்து, தக்காளி ரவி, பி.கே.பழனி ஜோசப், கார்த்திக் சுதா, ராணி சாந்தகுமார், மினர்வா எஸ். எம் பாட்சா, சி.அண்ணாத்துரை, எஸ். ராஜா, கருணா, அப்துல் கபீர் பி.கே. பழனி, வி.ராஜன், வி.சௌந்திரராஜன், என்.பாலா, பன்னீர், பழனி, முனியப்பன் அம்சா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-
ஒவ்வொரு கட்சியும் தீர்மானம் போடும் போது பில்டப் கொடுப்பது வழக்கம் தான். அதுபோலதான் திமுகவும் ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக தீர்மானித்துள்ளது. இதில் மக்களின் தீர்மானம் தான் முக்கியம். மக்களின் தீர்மானம் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பது தான்.

எதிர்க்கட்சி என்றால் நாங்கள் செய்யும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். செய்யும் எல்லாவற்றையும் தவறு என்று சொல்ல கூடாது. இன்று நிதி தன்னாட்சியை பற்றி பேசக்கூடிய திமுக தலைவர் ஸ்டாலின் அன்று மத்திய அரசுடன் கூட்டணி வைத்திருந்த போது மக்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறவில்லை. அதிமுக பொதுகுழு கூட்டம் சட்டப்படி முடிவெடுக்கப்பட்டு விரைவில் நடைபெறும். வளர்ந்த மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியின் அளவு குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் வழக்கம்போல் வளர்ந்த மாவட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாங்குகின்ற கடனை வட்டியுடன் திருப்பி செலுத்துகின்ற மாநிலம் தமிழகம் தான், அதனால் ரிசர்வ் வங்கி எப்போதும் போல் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார் என்றார். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று காயத்திரி ரகுராம் கருத்துக்கு பதில் அளித்த அவர்,(பாஜக, கலை மற்றும் கலாச்சார அணி தலைவர் தான் கட்சி தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்றார்். ஆசை அனைத்து கட்சியினருக்கு இருக்கும், ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர் என்றார்.