தற்போதைய செய்திகள்

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்ததற்காக நினைவு மண்டபம் அமைக்க அரசாணையை முதலமைச்சர் வெளியிடுவார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

மதுரை

ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்ததற்காக பெருங்காமநல்லூரில் நினைவு மண்டபம் அமைக்க அரசாணையை முதலமைச்சர் வெளியிடுவார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய் தலைமையில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் முன்னிலையில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 2 கோடியே 84 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;- 

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் இரு கண்களாக தமிழ்நாட்டை கட்டிக்காத்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர். முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பாக செயல்பட்டுவ ருகிறார். இன்று தமிழ்நாட்டிலுள்ள பிற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக மதுரை மாவட்டம் திகழ்கிறது. கொரேனா தொற்று காலத்தில் தங்கள் உயிரைப் பனையம் வைத்து பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களை அணைவரும் பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள், ஆனால் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று மதுரை முதல் தேனிவரை தூய்மைப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டார்.

தமிழ்நாடு அரசு 2 கோடியே 8 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு உரிய நேரத்தில் நிவாரண தொகுப்பு கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுடைய தேவைகளையும், விவசாயிகளின் தேவைகளையும், மற்றும் தொழிலாளர்களின் தேவைகளையும் அறிந்து பூர்த்தி செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினரை நாம் பெற்றிருக்கிறோம்.

தமிழகத்தின் பண்பாட்டின் அடையாளமாக ஜல்லிக்கட்டு உரிமை பறிபோனபோது ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த வேண்டுமென்று அனைவர் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டபோது, அப்போது ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்த பெருமை துணை முதலமைச்சரையே சேரும். வீரத்தின் விளைநிலமாக இருக்கிற பெருங்காம நல்லூரில் 110 விதியின் கீழ் நினைவு மண்டபம் அமைக்க இன்னும் இரண்டு நாட்களில் முதலமைச்சர் அரசாணை வெளியிடவுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

நிகழச்சியில் முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியின் கீழ் நான்கு பயனாளிகளுக்கும், இந்திரா காந்தி முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 19 பயனாளிகளுக்கும், ஆதரவற்ற விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கும், இலவச வீட்டுமனைப் பட்டா 17 பயனாளிகளுக்கும் என மொத்தம் 2 கோடியே 84 இலட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவிலான வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் உசிலம்பட்டி ராஜ்குமார், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.