சிறப்பு செய்திகள்

காஞ்சிபுரம் ராசியான மாவட்டம் -முதலமைச்சர் பேச்சு

சென்னை

குடிமராமத்துத் திட்டத்தை முதல்முதலாக துவக்கி வைத்த காஞ்சிபுரம் ராசியான மாவட்டம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது;-

அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களில் பெய்கின்ற மழை நீர் முழுவதையும் சேமித்து வைப்பதற்காக குடிமராமத்துத் திட்டம் என்ற திட்டத்தை அறிவித்து, அந்தத் திட்டத்தை ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும்பொழுது முதன் முதலாக இந்த மாவட்டத்தில் தான், நான் துவக்கி வைத்தேன். இது ஒரு ராசியான மாவட்டம். குடிமராமத்து திட்டத்தை இந்த மாவட்டத்தில் துவக்கிய காரணத்தினால், தமிழ்நாடு முழுவதும் ஏரிகள் தூர்வாரப்பட்டு, நல்ல பருவமழை பொழிந்து கொண்டிருக்கின்றன, ஏரிகள் நிறைந்து கொண்டிருக்கின்றன.

இந்த மாவட்டத்தில் உள்ள நதிகளின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்து, அதில் 2 தடுப்பணைகள் கட்டப்பட்டு, அதில் தற்பொழுது நீர் நிரம்பியிருக்கின்றன. ஒரு தடுப்பணையின் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது மற்றும் ஒரு தடுப்பணை கட்டும் பணி விரைவில் துவங்க இருக்கின்றது. எஞ்சிய 3 தடுப்பணைகள் கட்டும் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட இருக்கின்றன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.