சிறப்பு செய்திகள்

கொரோனா களப்பணியாளர்களை குறை கூறவேண்டாம் – முதலமைச்சர் உருக்கமான பேச்சு

சென்னை

பாராட்ட மனமில்லாமல் இருந்தாலும் பரவாயில்லை,கொரோனா களப்பணியாளர்களை குறை கூறவேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உருக்கமாக பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

அரசு அறிவிக்கின்ற திட்டங்களைச் செயல்படுத்துவது அரசுப் பணியாளர்கள் தான். அது எந்த ஆட்சியானாலும் சரி. எனவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக, துணையாக நிற்க வேண்டியதை விட்டுவிட்டு, இன்றைக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டார்கள் என்று தவறான கருத்தைச் சொல்வது எப்படி ஏற்புடையதாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அரசுக்கு ஒவ்வொரு உயிரும் முக்கியம். அதேபோல ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை காப்பாற்றுகின்றவர்கள், நம் அரசுப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள்.

அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி, அரசுக்கு துணை நின்று கொரோனா நோய் பரவலைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாராட்ட மனமில்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து குறை சொல்லாமல் இருந்தாலே அவர்களைப் பாராட்டுவதாக இருக்கும் என்ற கருத்தைத் தெரிவிக்கின்றேன். சிறப்பாக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிறவர்களுக்கு ஆறுதலாக நல்ல வார்த்தைகளை சொன்னால்தான் அவர்கள் இன்னும் சிரத்தையோடு பணியாற்றுவார்கள். அவர்களைக் குறை கூறிக் கொண்டிருந்தால், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிற தங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அவதூறான சொல் கிடைக்கிறதே என்று, அவர்களது மனம் கஷ்டப்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அவர்களுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். அதுதான் நாம் அரசு பணியாளர்களுக்கு செய்கின்ற கடமையாகும். மார்ச் 24ம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட 5 மாத காலம், கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளை நம் அரசு அலுவலர்கள் தொடர்ந்து தொய்வின்றி முழு ஈடுபாட்டோடு செய்து கொடிருக்கிறார்கள். நாம் அனைவரும் அவர்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.