மற்றவை

கொரோனாவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகின்றன – முதலமைச்சர் குற்றச்சாட்டு

சென்னை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, இந்த நோய்த் தொற்றுப்பரவலைத் தடுக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது என்று வேண்டுமென்றே சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புதிய நோய். நாளுக்கு நாள் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலும், இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையிலும், தமிழ்நாடு அரசின் கடும் நடவடிக்கைகள் காரணமாக, மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து, சராசரியாக 88 சதவிகிதம் நபர்கள் குணமடைந்துள்ளனர். இதுவே மிகப்பெரிய வெற்றி ஆகும். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 118 முதல் 120 வரை என்று இருந்தது.

சிறந்த முறையில் சிகிச்சை அளித்த காரணத்தால் தற்பொழுது அது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய சாதனை ஆகும். ஏற்கனவே பிற நாள்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு இந்தத் நோய் தொற்று எளிதாகப் பரவுவதால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட, நேரடியாக கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவு என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்றினால் இந்நோய்த் தொற்றுப் பரவலை எளிதாக தடுத்துவிடலாம். அரசாங்கத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கினால்தான் இந்த நோய்த் தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்து இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்.

எவ்வளவு தான் அரசாங்கம் முயற்சி செய்தாலும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் கொரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். கொரோனா வைரஸ் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல, உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் ஒரு கடுமையான நோய். எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏதோ தமிழகத்தில் தான் இந்த நோய் ஏற்பட்டதைப் போலவும், தமிழகத்தில் தான் கட்டுப்படுத்த தவறியதைப் போலவும் வேண்டுமென்றே எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசின் மீது குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அது தவிர்க்கப்பட வேண்டும்.

சுகாதாரத் துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை, உணவுத்துறை என்று பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், தங்கள் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல், அர்ப்பணிப்பு உணர்வோடு இப்படிப்பட்ட சோதனையான காலத்தில் முன் நின்று மக்களுடைய உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம்.

இந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பணியிலே இருக்கும்பொழுது இறந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், இந்நோய்த் தொற்று ஏற்பட்ட காலக்கட்டத்திலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்று அர்ப்பணிப்போடு பணியாற்றியதால் தான்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.