தற்போதைய செய்திகள்

காற்றில் மனக்கோட்டை கட்டி அதில் குடியிருப்பவர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் க.பாண்டியராஜன் கடும் தாக்கு

அம்பத்தூர்

காற்றில் மனக்கோட்டை கட்டி அந்த கோட்டையில் குடியிருப்பவர் மு.க.ஸ்டாலின் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க
ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 6 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஆவடி அரசு பொது மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில் அதிநவீன கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிநவீன கருவிகளோடு கூடிய எக்ஸ்ரே ஆய்வகம், நோயாளிகள் வரவேற்பு அறை, பரிசோதனை மையம், பாதுகாப்பு கவசம் அணியும் அறை மற்றும் மருத்துவ கழிவுகள் வெளியேற்றும் அறை உள்ளிட்டவை நோயின் தன்மை பரிசோதனை செய்து அதை ஸ்கிரீனிங் செய்யும் முறையுடன் இந்த கொரோனா பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 400 பேர் பரிசோதனை செய்யும் வகையில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட கொரனோ பரிசோதனை மையத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அங்கிருந்த மருத்துவர்களிடம் பாதிக்கபட்டவர்களை இங்கே எத்தனை நாள் தங்க வைக்கலாம் எவ்வளவு சீக்கிரம் நோயின் தன்மையை அறியலாம் என்பன போன்றவற்றை கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் க.பாண்டியராஜன் ெசய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோயின் தாக்கம் இந்திய அளவில் தமிழகத்தில் தான் கடந்த நாட்களில் குறைந்த அளவே காணப்படுகிறது. முதல் முறையாக கொரோனா போரில் வெற்றி கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. மேலும் கொரோனா அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் இன்று 22 வது இடத்திற்கு வந்துள்ளது. தினந்தோறும் ஒரு மாநிலத்தை முன்னுக்கு தள்ளி நாம் பாதிப்பில் இருந்து பின்னோக்கி செல்கிறோம்.

நாம் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி, தினந்தோறும் கைகளை பல முறை சுத்தமாக கழுவுதல் உட்பட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் கொரோனாவின் இரண்டாவது அலையில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம். ஏனென்றால் கொரோனா முதல் தாக்கத்தில் குறைந்த அளவு பாதிப்பே காணப்பட்ட டெல்லி மாநிலத்தில் தற்சமயம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா இரண்டாம் அலையில் சிக்கிக் கொண்டுள்ளனர். எனவே நாம் பாதுகாப்புடன் முகக்கவசம் அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

நீட் விவாகரம் குறித்து திருமாவளவன் கருத்திற்கு அமைச்சர் க.பாண்டியராஜன் பதிலளிக்கையில், நீட் விவகாரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் உள்ளது. பஞ்சத்திற்கு வழக்குப்பதிவு செய்வது நாங்கள் கிடையாது. பரம்பரையாக வழக்குப்பதிவு செய்து மக்கள் பணியாற்றி வருகிறோம்.
நீண்ட நாட்களாக வழக்கு உள்ள நிலையில் அந்த வழக்கு எங்கு உள்ளது என கூட யாருக்கும் தெரியாது. மீண்டும் ஒரு முறை புதிதாக வழக்கு தொடுக்க முடியாது என்று கூறினார்.

கடந்த வாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் யூனியன் சுகாதாரத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் இந்த வருடமாவது நீட் தேர்வை வைக்காமல் அதற்கு பதிலாக ஏற்கனவே நாங்கள் செய்தது போல் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அவரிடம் நேரிலும் பேசியாகிவிட்டது.

மத்திய அரசாங்கம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி இருந்த நிலையில் தீர்ப்பு வந்து விட்டது. இப்பொழுது இன்னும் இரண்டு நாட்களில் தேர்வு நடைபெற உள்ளது.

பிறகு தமிழகத்தில் கல்வித் துறை எடுத்த முயற்சியால் நீட் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சியில் அமரும் என்று மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பதிலளித்த அமைச்சர் க.பாண்டியராஜன், மருத்துவ ரீதியாக நாம் பார்த்தோமேயானால் மன நோயில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நியூராபிஃஸ். மற்றொன்று சைக்காசிஸ். நியூராபிஃஸ் என்பது காற்றில் மனக்கோட்டை கட்டி பூமியில் கால் பதித்து கற்பனையில் வாழ்பவர்கள்.

இரண்டாவது சைக்காசிஸ். காற்றில் மனக்கோட்டை கட்டி அந்த கோட்டையிலேயே குடியிருப்பது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவர். எனவே அவர் நல்ல மருத்துவரிடம் சென்று மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம். மத்திய அரசின் கிசான் யோஜனா திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று கூறும் மு.க.ஸ்டாலினுக்கு நான் கூறுவது என்னவென்றால், அந்த திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்ததே தமிழக அரசு தான்.

அந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து பணத்தை பறிமுதல் செய்ததோடு சட்டரீதியாக உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான விவசாயிகள் இந்த திட்டத்தில் பலர் பயன் பெற்றுள்ளனர். பள்ளிகள் திறப்பது குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வதை அரசு கேட்க முடியாது. மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தான் முடிவு எடுக்க முடியுமே தவிர ஸ்டாலின் சொல்வதை அரசு கேட்க முடியாது.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அதிகாரி பிரபாகரன், ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன், வட்டாட்சியர் சங்கிலி ரதி, ஆவடி நகர கழக செயலாளர் ஆர்.சீ.தீனதயாளன், நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்