சிறப்பு செய்திகள்

இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்

சென்னை

மத்திய எரிசக்தித் துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதா 2020 தொடர்பாக தமிழ்நாட்டின் நிலை குறித்தும் மின்சாரத்துறையின் கோரிக்கைகள் தொடர்பாகவும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழக அரசின் கோரிக்கை மனுவை அளித்தார்.

அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். புரட்சித்தலைவி அம்மாவின் தீவிர முயற்சிகளின் காரணமாக தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியது. இந்தியாவிலேயே தமிழகத்தில் பன்முகப்படுத்தப் பட்ட மின்சார உற்பத்தி பிரிவுகள் அதிகம் உள்ளன. இங்குள்ள மின்சார நிறுவுதிறனில் புதுப்பிக்கப்படத்தக்க மின்உற்பத்தி 49.47 சதவீதம் பங்களிப்பை அளிக்கிறது.

புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல், நடு மற்றும் நீண்டகால மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க மின்சார ஆதார விரிவாக்கம் போன்றவற்றின் மூலம் 2011ம் ஆண்டில் இருந்து 15 ஆயிரத்து 410 மெ.வா. மின்சாரத்தை தமிழகம் பெற்று வருகிறது. இதன்மூலம் அனைத்து தரப்பிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் மிகப்பெரிய முயற்சிகள் மூலம் தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. இந்த நிலை தொடர்வதற்கு உங்களின் ஆதரவைக் கோருவதோடு சில முக்கிய பிரச்சினைகளை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதாவில் உள்ள தமிழகத்துக்கு கவலையளிக்கும் சில அம்சங்கள் பற்றிய கருத்துகளை தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. தமிழக விவசாயிகள் இலவச மின்சாரம் பெற வேண்டும் என்பதில் நிலையான கொள்கையை தமிழக அரசு கொண்டுள்ளது. இது தொடர்ந்து நீடிக்க வேண்டும். எனவே மத்திய அரசின் டி.பி.டி. (நேரடி பணப்பகிர்மானம்) கொள்கையை விவசாயப்பிரிவில் சேர்க்கக் கூடாது.

அனைத்து வீட்டு மின்சார நுகர்வோருக்கும் 100 யூனிட் மின்சாரத்தை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. இதற்கான மானியத்தை தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு (டான்ஜெட்கோ) அரசு நேரடியாக வழங்குகிறது. எனவே டி.பி.டி. முறைக்கு இந்த திட்டமும் கொண்டு வரப்படக் கூடாது.

மானியங்களை வழங்குவது, மாநில மின்சார ஆணையத்தின் அனுமதியின் பெயரில் தான் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மானியம் வழங்குவது, மாநில அரசின் பரிசீலனைக்கே விடப்பட்டுள்ளது. தற்போது இந்த மசோதாவில், தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் ஷரத்து இடம் பெற்றுள்ளது. இதனால், மின்சாரத்தை நீண்டதூரம் கொண்டு வந்து பகிர்ந்தளிக்கும் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் நலன் பாதிக்கப்படுவதோடு, ஊதியம் அளிப்பது தொடர்பான பிரிவுகளை தனியாரே எடுத்துக் கொள்ள வழிவகை செய்கிறது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு புனல் மின்சார கொள்முதல் பொறுப்புகளை தனியாக நிர்ணயிப்பதை ஏற்க முடியாது. பருவ காலங்களை நம்பியே தமிழகத்தில் புனல் மின்சார உற்பத்தி இருக்கிறது. அது மின் விநியோக நிறுவனங்களின் வசத்தில் இல்லை. அதுபோல புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கொள்முதல் செய்வதில் ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்று தான் நிர்ணயிக்க வேண்டுமே தவிர, சூரிய மின்சக்தி, சூரிய மின்சக்தி அல்லாதவை, புனல் மின்சக்தி என தனித்தனியாக நிர்ணயிக்கக் கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயத்துக்கென்று தனியான பீடர்களை பிரிக்கக்கூடாது. இது விவசாயிகள் மத்தியில் உள்ள அமைதியை குலைக்கும். இதற்கு மாறாக, பம்பு செட்களுக்கு மின்சாரம் அளிக்கும் கிரிட்களை சூரியமின்சக்திக்கு உட்படுத்தலாம். இதற்கு மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை 100 சதவீத மானியம் வழங்க வேண்டும்.

மின்சார நிதிக் கழகம் மற்றும் ஊரக மின்மயமாக்க கழகம் ஆகியவற்றுக்காக ரூ.20 ஆயிரத்து 622 கோடி நிதி கேட்டு டான்ஜெட்கோ விண்ணப்பித்துள்ளது. இதை மத்திய அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும். டான்ஜெட்கோவின் அனல் மின்உற்பத்தி நிலையங்களுக்கு நாளொன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. தற்போது வடசென்னை, மேட்டூர் அனல் மின்நிலையங்களின் இணைப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

நிலக்கரியை வாங்கும் செலவை குறைப்பதற்காக, அவற்றை அனல் மின்சார நிலையத்தின் நுகர்விடத்திற்கே வந்து அளிக்கும்படி இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும். இது மின்சார கட்டணத்தை குறைப்பதற்கும், அதன் மூலம் மின்சார நுகர்வோர் பயனடையவும் வழிவகுக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம், எரிசக்தித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மேலாண் இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், எரிசக்தித்துறை அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சீவ் நந்தன் சகாய், கூடுதல் செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா, சூரிய சக்தி கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெ.என்.ஸ்வைன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.