தமிழகம்

காஞ்சிபுரம் நகராட்சியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மதிப்பீடு தயாரிக்கும் பணி – முதலமைச்சர் தகவல்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் கீழ் 72 குடியிருப்புகளுக்கு ரூபாய் 488 லட்சத்தில் குடிநீர் இணைப்புக் குழாய் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு ரூபாய் 260 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. திருப்பெரும்புதூர் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கல் திட்டம் ரூபாய் 42.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலையம் கீழ்கதிர்பூர் கிராமத்தில் ரூபாய் 38 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.