தற்போதைய செய்திகள்

கடலூரில் பொதுமக்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் – அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர்

கடலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா கடலூர் மாவட்ட சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜகிருபாகரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வே.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விலையில்லா முகக்கவசங்களை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்நிழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து பொது இடங்கள் மற்றும் பணியிடங்களிலும், பிற இடங்களுக்கு பயணிக்கும் போதும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஆணைக்கிணங்க நியாயவிலை கடைகளின் மூலம் இலவச முகக் கவசங்கள் விநியோகிக்க கடலூர் மாவட்டத்தில் உள்ள 1420 நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் 729949 குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களில் உள்ள 2414114 நபர்களுக்கு தலா 2 வீதம் 4828228 தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் தடுக்க அனைத்து தரப்பு மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். 95 சதவீதம் பேர் பாதுகாப்பாக இருந்தாலும் 5 சதவீதம் பேர் பாதுகாப்பு இல்லாமல் இருந்தால் பாதுகாப்பாக இருப்பவர்களுக்கும் நோய் தொற்று பரவி விடுகிறது. எனவே 100 சதவீதம் பேரும் சமூக பொறுப்புணர்வுடன் விழிப்புடன் இருந்தால் மட்டுமே நோய் தொற்று பரவல் தடுக்கப்படும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரவேண்டும்.

வெளியே வரும் பட்சத்தில் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்தும், சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவதன் மூலம் தங்களையும், தங்கள் குடும்பத்ைதயும் பாதுகாப்பாக வைக்க ஒவ்வொருவரும் விழிப்புடன் இருப்போம் என உறுதியேற்போம். அனைவரும் சமூக அக்கறையுடன் அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றி நோய் தொற்று இல்லாத கடலூர் மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குநர் சொ.இளஞ்செல்வி, கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜே.குமார், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கே.காசிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.