தமிழகம்

கொரோனா நோய் தொற்று குறைந்த பிறகு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கப்படும் – முதலமைச்சர் உறதி

சென்னை

கொரோனா நோய் தொற்று குறைந்த பிறகு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி – தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து….

பதில் – மாநில அரசு கொரோனாவை தடுப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எங்கெல்லாம் நோய் தொற்று இருக்கிறதோ, அங்கெல்லாம் நடமாடும் மருத்துவக் குழு, அந்த பகுதிக்கே சென்று, அப்பகுதிகளில் உள்ள மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி, தொற்று அறிகுறி இருந்தால் அவர்களை அழைத்து வந்து ஆர்டிபிசி பரிசோதனை செய்து, பரிசோதனையில் பாசிட்டிவ்வாக இருந்தால், மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைய செய்கிறார்கள்.

கேள்வி – தென்மாவட்டங்களில் கீழடி போன்ற பகுதிகளில் அகழ்வராய்ச்சி பணிகள் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் பாலாற்று கரையோரங்களில் பழவேரி போன்ற கிராமங்களில் 5000 ஆண்டுகள் பழைமையான பொருட்கள் கிடைக்கிறது. அங்கு அகழ்வராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுமா…

பதில் – ஒவ்வொரு பகுதியாக அகழ்வராய்ச்சி செய்து வருகிறோம். நீங்கள் சொல்கின்ற கருத்தையும் அரசு பரிசீலிக்கும்.

கேள்வி – மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து எப்போது தொடங்கும்?

பதில் – கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அது குறைந்த பிறகு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.