தற்போதைய செய்திகள்

20,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் – சிவகங்கையில் அமைச்சர் ஜி. பாஸ்கரன் வழங்கினார்

சிவகங்கை

சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கதர் மற்றும் கிராம வாரிய துறை அமைச்சர் ஜி. பாஸ்கரன் கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு எடுத்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். அதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகங்கை நகரம், கல்லல், காளையார்கோவில், சிவகங்கை மானாமதுரை ஒன்றியங்களில் சுமார் 20 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கி வருகிறார்.
மானாமதுரை ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு அமைச்சர் ஜி.பாஸ்கரன் தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன், சிவகங்கை ஒன்றிய பெருந்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீதரன், சோனைரவி, கூட்டுறவு சங்கத் தலைவர் சசிகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.