தற்போதைய செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.45 கோடியில் 18 புதிய சாலை பணிகள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 18 சாலை பணிகள் நடைபெற்று வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்லாங்காட்டில் வத்தல்மலை பெரியூர் வரை ரூ.10.23 கோடி மதிப்பீட்டில் 13.080 கி.மீ தொலைவிற்கு புதிய சாலை அமைக்கும் பணியை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

பின்னர் வத்தல்மலையில் நடைபெற்ற விழாவில் 85 பயனாளிகளுக்கு ரூ.20.83 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, வத்தல்மலை மலைவாழ் மக்கள் பெறும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தையும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 18 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டம், வத்தல்மலையில் ரூ.10 கோடியே 22 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் அன்னசாகரம்-கொமத்தம்பட்டி, நாயக்கனூர் சாலை (வழி) பால்சிலம்பு மற்றும் வத்தல்மலை பெரியூர் வரை 13.08 கி.மீ. தொலைவிலான சாலை மேம்பாட்டு பணிகள் கொட்லாங்காட்டியில் பூமி பூஜை செய்து துவங்கப்பட்டுள்ளது.

வத்தல்மலைக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது ரூ.18 கோடி செலவில் முதல்முதலாக புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. தமிழக அரசின் பங்களிப்போடு மத்திய அரசின் சாலை மேம்பாட்டு திட்டங்கள் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் ரூ.45 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் 18 சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு 40 சதவீதம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக அரசு நிதி ஒதுக்கீடு குறிப்பிட்ட சதவீதத்தில் செய்தால் தான் மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்த நிதி பெற முடியும்.

வத்தல்மலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சாலை மேம்பாட்டு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் மூலம் ஒரு வீடு கட்டுவதற்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியில் 50 ஆயிரம் ரூபாய் தமிழக அரசின் நிதி ஆகும். எந்த ஒரு நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும் என்றாலும் மாநில அரசின் நிதி பங்களிப்பு அவசியம் தேவை.

தமிழக உயர்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் ரூசா திட்டத்தின் மூலம் 40 சதவீத தமிழக அரசின் நிதி பங்களிப்புடன் 60 சதவீத மத்திய அரசின் நிதியை பெற்று தமிழகம் முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிகளும், தரமான கட்டிடங்களும் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீண்ட தூரம் நியாயவிலை கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கும் நிலையை மாற்றி, தேவைப்படும் இடங்களில் புதிய நியாயவிலைக் கடைகளை அரசு தொடங்கி வருகிறது. வத்தல்மலை பகுதியில் தொடங்கப்பட்டுள்ள நியாய விலை கடை மூலம் மலைவாழ் மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, தருமபுரி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பூக்கடை பெ.ரவி, தருமபுரி ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஆ.தணிகாசலம், வட்டாட்சியர் ரமேஷ், கூட்டுறவு சங்கத்தலைவர் (வத்தல்மலை) ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.